தமிழ் மக்களுக்கு தீர்வுத்திட்டம் வரும்போது அதனை குழப்புக்கூடிய செயற்பாடுகள் நடைபெறுவது உண்டு. அந்த குழப்ப நிலையினை தமிழ் அரசியல் தலைமைகளே செய்துவந்ததாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரிவுகளிலும் இருந்து கிராமங்களின் முக்கிஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
ஜனநாயக நாட்டில் ஜனநாயக ரீதியான அமைப்புகள் உருவாவது தவிர்க்கமுடியாத விடயம். அந்த வகையில் விக்னேஸ்வரன் ஐயா தலைமையில் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வுத்திட்டம் வழங்குவதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அதனை இராஜதந்திர ரீதியில் நகர்த்தவேண்டிய தேவையுள்ளது.
இந்தவேளையில் இந்த நகர்வுகளை குழப்பும் விதமாக அமையக்கூடாது என்பதே அனைவது எதிர்பார்ப்பாகும்.
சேர் பொன் அருணாசலம் அவர்கள் இரண்டு ஒன்று பிரதிநித்துவத்தினை கேட்டார். ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் அதனை குழப்புவதற்காக ஐம்பதுக்கு ஐம்பது தரவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தார்.
கேட்கும் விடயத்தில் ஒரு நியாயத்தன்மை இருக்க வேண்டும்.இவ்வாறு அன்றைய காலகட்டத்தில் குழப்பகரமான கருத்துக்களை கூறி கிடைப்பதையும் கிடைக்காமல் செய்த காலமாக இருந்தது.
அதேபோன்று எஸ்.டபிள்யு.ஆர்.பண்டாரநாயக்க அவர்கள் முதன்முறையாக இலங்கைக்கு ஒற்றையாட்சி முறை பொருந்தாது, சமஸ்டி ஆட்சியே பொருத்தமாக இருக்கும் என்று ஒரு தீர்வு திட்டம் முன்வைத்தபொது எமது சில தமிழ் தலைவர்கள் நாங்கள் ஒற்றையாட்சியின் கீழ்தான் இருக்கவேண்டும் என்று அடம்பிடித்தார்கள்.
இவ்வாறு ஒரு தமிழ் மக்களுக்கு தீர்வுத்திட்டம் வரும்போது அதனை குழப்புக்கூடிய செயற்பாடுகள் நடைபெறுவது உண்டு.
ஜி.ஜி.பொன்னம்பலம் சிறந்த சட்டத்தரணி.சிறந்த புத்திஜீவியாக இருந்தார். ஆனால் அவர் அரசியல் ரீதியான விடயத்தில் ஐம்பதுக்கு ஐம்பது கோரி ஒன்றுமே இல்லாமல் செய்துவிட்டார்.
எஸ்.டபிள்யு.ஆர்.பண்டாரநாயக்க அவர்கள் சமஸ்டி தொடர்பில் கூறிய காலத்தில் எமது அரசியல் விடயத்தில் எமது அரசியல் தலைவர் சமயோசிதமாக நடந்திருந்தால் நாங்கள் சமஸ்டியை பெற்றிருக்கமுடியும்.இலட்சக்கணக்கான உயிர்களை இழக்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது.
இந்த தவறுகளை புரிந்தவர்கள் இறந்துவிட்டனர். ஆனால் அதன் காரணமாக எமது சந்ததிகளே கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுவந்தது.
இதேபோன்று குமார் பொன்னம்பலம் அவர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆரம்பித்தபோது அவர் விலகி நின்று அதனை குழப்பிக்கொண்டிருந்தார்.
இறுதி நேரத்தில் அவர் இணைந்து கொண்டு சார்பாக செயற்பட்டார். தற்போது அவரது மகன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் விதண்டாவதத்துடன் நின்றுகொண்டுள்ளார்.
நாங்கள் பெரிதாக கேட்டு ஒன்றும் இல்லாமல் செய்யும் நிலைமையினை உருவாக்ககூடாது.
சம்பந்தன் ஐயா முதிர்ச்சிபெற்ற சாணக்கில் அரசியல்வாதி.பல தலைவர்களுடன் அரசியல் பணியை ஆற்றியுள்ளார்.
அனைத்து அரசியல் தலைவர்களினதும் வளைவு நெளிவினை அறிந்தவர்.அவர்களிடம் இருந்து தீர்வுத் திட்டத்தினைப் பெற்றுக்கொள்வதில் அவர் தேர்ச்சி பெற்றவராக உள்ளார்.
இவ்வாறான நிலையில் குழறுபடியான குழப்பமான நிலைமையினை எந்தவொரு அமைப்பும் எந்தவொரு சபையும் செயல்படக்கூடாது.
தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு செல்லும்போது அதனை புறந்தள்ளுமாறு மக்களை தூண்டும்போது எமக்கு ஒன்றும் கிடைக்காத நிலையே உருவாகும்.
பிராந்திய சபைகளை சந்திரிக்கா அம்மையார் கொண்டுவந்தார். அதில் நல்ல அம்சங்களும் இருந்தன.வடக்கு கிழக்கு இணைப்பு, ஆளுனரின் அதிகாரத்தினை குறைப்பது,
ஆளுனரை நியமிக்கும் சிபார்சினை முதலமைச்சர் வழங்குவது உட்பட தமிழர்களை பெரும்பான்மையாக கொண்டு அந்த திட்டம் தயாரிக்கப்பட்டபோது அதனை நாங்கள் குழப்பினோம்.இன்றைய நிலையில் அந்த பிராந்திய சபை கூட கிடைப்பது கஸ்டமான நிலையிலேயே உள்ளது.
அவ்வாறான ஒரு தீர்வுத்திட்டம் தொடர்பில் நாங்கள் சிந்திக்கும்போது புதிதாக உருவாகுபவர்கள் புதிய திட்டங்களைத்தயாரித்து அதன்படி செயற்படும்போது மேலும் மேலும் எமது இனப்பிரச்சினை இழுபறி நிலையிலேயே செல்லும்.
நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு இருக்கும்போது மக்கள் எங்களிடம் பல கேள்விகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.
மக்கள் பொறுக்கும் காலம் ஒரு வரையறைக்குள்ளேயே இருக்கும்.அதற்குள் ஒரு தீர்வுத்திட்டத்தினை வழங்கவேண்டிய தேவையுள்ளது.
மட்டக்களப்பிலும் இருந்து சிலர் தமிழ் மக்கள் பேரவைக்கு சென்றுள்ளனர். தங்களிடம் கேட்காமல் சென்றதாக எமது ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையும் கூறியுள்ளார்.
இவ்வாறான குழறுபடிகள் இருக்கும்போது நாங்களும் தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் விழிப்பாக இருக்கவேண்டும். நல்லதை செய்தால் அவர்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்.
கருணா, டக்ளஸ், ஆனந்த சங்கரி போன்றவர்களும் இந்த தமிழ் மக்கள் பேரவையில் இணையப் போகின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறான நிலையில் அது தொடர்பில் கூடுதலாக சிந்திக்வேண்டிய தேவையிருக்கின்றது என்றார்.
0 Comments