ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி பொறுப்பேற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு ‘மைத்திரிஆட்சி – ஸ்திரமான நாடு: ஒரு வருட பூர்த்தி” என்ற தொனிப்பொருளின் இன்று 8 ஆம் திகதியும் நாளை 9 ஆம் திகதியும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக அதற்கான ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம், இன்று 8 ஆம் திகதி நிகழ்வுகள் ஜனாதிபதி சிறிசேன காலை களுத்தறை விகாரையில் மத வழிபாடுகளில் ஈடுபட்டு நிகழ்வுகளை ஆரம்பிப்பதுடன், அதன் பின்னர் ஜனாதிபதியினால் அபிவிருத்தி திட்டங்கள் சில உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
இவற்றை அடுத்து பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதான நிகழ்வு நடைபெறவுள்ளது. அதில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளதுடன், இலங்கைக்கான ஐ.நா.வின் நிரந்தர பிரதிநிதி சுபினய் நந்தி, ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட செய்தியை இந் நிகழ்வின் போது வாசிக்கவிருப்பதாகவும் நிகழ்வுக்கான ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாது, இந்தியாவைச் சேர்ந்த பிரசித்திபெற்ற முக்கியஸ்தர் ஒருவரும் இந் நிகழ்வில் விசேட உரைநிகழ்த்தவிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இவற்றின் இறுதியில், ஜனாதிபதி சிறிசேன நிகழ்வின் பிரதான உரையை நிகழ்த்தவுள்ளார்.
நாளை 9 ஆம் திகதி காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கலாசார கண்காட்சி நடத்தப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல்இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டத்திலும் அதேபோல், 9 ஆம் திகதி சுதந்திர சதுக்க ஆர்க்கேடிலும் புகைப்பட கண்காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
0 Comments