Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சிறுபான்மைச் சமூகத்தைக் அடகு வைக்க நீங்கள் விரும்பினால் வெற்றிலைக்கு வாக்களியுங்கள் -நஸீர் அஹமட்

மீண்டும் ஒரு தம்புள்ள பள்ளி உடைப்புக்கும், மீண்டும் ஒரு அளுத்கமக் கலவரத்துக்கும், மீண்டுமொரு குடும்ப ஆட்சிக்கும், இந்த சிறுபான்மைச் சமூகத்தைக் அடகு வைக்கவும் நீங்கள் விரும்பினால் வெற்றிலைக்கு வாக்களியுங்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் போட்டியிடுகிறது. கல்குடாத் தொகுதியில் ஸ்ரீ.மு.கா.வில் சகோதரர் றியாழ் போட்டியிடுகிறார். அங்குள்ள மக்களைச் சந்திக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் இன்று (23) மாலை 7 மணிக்கு அங்கு சென்றிருந்த வேளை மக்கள் அமோக வரவேற்பளித்து வரவேற்றனர்.
தேர்தல் நடவடிக்கைகளைச் செயற்படுத்த சென்றிந்த முதலமைச்சரை வரவேற்க அதிகமான மக்கள் கூடியிருந்தனர். அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் நீண்ட உரையொன்றினை நிகழ்த்தினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இன்று பெரும் சவாலுக்குரிய தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம். இத்தேர்தல் மூலம் சிறுபான்மை மக்கள் தங்களின் இருப்புக்களை சரியாகக் கணித்துக் கொள்ளவேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று அவர்கள் நியமித்திருக்கும் உறுப்பினரை பாராளுமன்றத்திற்கு அனுப்ப ஒற்றுமையுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அதுபோல் இலங்கை முஸ்லிம்களின் குரலாக ஒலிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமித்திருக்கும் உறுப்பினர்களை நாமும் வெற்றியடைய வைக்க வேண்டும்.

அப்போதுதான் நாம் வெற்றியடைந்தவர்களாவோம். கூஜா தூக்கிகளாகவும், சுயநலவாதிகளாகவும்இ சுயலாபத்துக்காகவும் இன்று பலர் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நீங்கள்தான் சரியான பாடம் புகட்ட வேண்டும். மீண்டும் ஒரு தம்புள்ள பள்ளி உடைப்புக்கும், மீண்டும் ஒரு அளுத்கமக் கலவரத்துக்கும், மீண்டுமொரு குடும்ப ஆட்சிக்கும், இந்த சிறுபான்மைச் சமூகத்தைக் அடகு வைக்கவும் நீங்கள் விரும்பினால் வெற்றிலைக்கு வாக்களியுங்கள்.
இல்லையென்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்து நமது பலத்தைப் பிரயோகிக்க இடமளிப்போம். அப்போதுதான் நமக்கான குரல் ஓங்கி ஒலிக்கும்.

எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் எவ்வாறு ஸ்ரீ.மு.கா மரச்சின்னத்தில் போட்டியிட்டு வேட்பாளர்களை இறக்கியுள்ளதோ, அதுபோன்று வன்னியிலும் ஸ்ரீ.மு.கா மரச்சின்னத்தில் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. எனவே ஏனைய மாவட்டங்களில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீ.மு.கா வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலமும் எம் சமூகத்தின் விடியலுக்கான குரல் ஓங்கியொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே இம்முறை பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 12 ஆசனங்களுடன் ஒலிக்க வேண்டுமென்றால் அனைவரும் பொதுநலத்துடன் சிந்தித்து வீணாக வாக்குகளை சில்லறைகளுக்கு வழங்காமல் மரச்சின்னத்துக்கு வழங்கி நமது பிரதி நிதியை வென்றெடுக்க களத்தில் குதிக்க முன்வருமாறு முதலமைச்சர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
கிழக்கு மாகாணத்தை இலங்கையில் சிறந்ததொரு மாகாணமாக மாற்றியமைக்க மக்களின் ஒத்துழைப்புக் கட்டாயமாகவிருக்கிறது எனவே மக்களின் ஆதரவை முழுமையாக வழங்குவதன் மூலமே அதனைச் செய்யமுடியும் என்றும் முதலமைச்சர் தனதுரையில் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments