தென்தாமரைகுளம் போலீஸ்நிலையத்துக்கு நேற்றுமுன்தினம் மாலை அந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் போனில் பேசினர். மொபட்டில் சென்ற 2 இளம்பெண்கள் கடத்தப்பட்டதாகவும், அவர்களை மீட்க வேண்டும் என்றும் கூறி பதட்டத்துடன் கூறினர். அவர்கள் கூறியதாவது:–
நாங்கள் கரம்பவிளை பகுதியில் நின்று கொண்டிருந்தோம். அப்போது 2 இளம்பெண்கள் மொபட்டில் சென்றனர். அவர்களை பின் தொடர்ந்து ஒரு வாலிபரும் சென்றார். அந்த வாலிபர் பெண்களிடம் சில்மிஷம் செய்தபடி மோட்டார்சைக்கிளை ஓட்டினார். அதற்கு அந்த பெண்கள் கூச்சலிட்டபடியே வேகமாகச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்து நாங்கள் அந்த மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்தோம். சிறிது தூரம் சென்ற நிலையில் அந்த வாலிபரும், இளம்பெண்களும் மாயமாகி விட்டனர். எனவே அந்த பெண்களை வாலிபர் கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். எனவே நீங்கள் விசாரணை நடத்தி இளம்பெண்களை கண்டுபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாலிபர்கள் அளித்த தகவலை தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஆண்டிவிளையில் இருந்து மணக்குடி செல்லும் சாலையில் முந்திரி தோப்பு அருகே ஒரு மொபட் அனாதையாக நின்றது. போலீசார் அந்த இடத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு வாலிபர் அங்கு வந்து மொபட்டை எடுத்தார். போலீசார் விசாரித்தபோது அந்த மொபட் தன்னுடையது என்று வாலிபர் கூறினார். மொபட்டில் 2 பெண்கள் வந்ததாக எங்களுக்கு புகார் வந்துள்ளது, அந்த பெண்கள் எங்கே என்று கேட்டு வாலிபரிடம் போலீசார் துருவி, துருவி விசாரித்தனர்.
அப்போது வாலிபர் உண்மையை ஒப்புக் கொண்டார். மொபட்டில் வந்த 2 பெண்களில் ஒருவருடன் எனக்கு கள்ளத் தொடர்பு உள்ளது. அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்க அவரை நான் இங்கு அழைத்து வந்தேன். வீட்டில் சந்தேகம் ஏற்படாமல் இருக்க அவர் தனது தோழியையும் அழைத்து வந்துள்ளார் என சொன்னார்.
அந்த பெண்கள் எங்கே? என்று கேட்டபோது இருள்சூழ்ந்த ஒரு இடத்தை வாலிபர் காட்டினார். அங்கு 2 இளம்பெண்களும் பதுங்கியிருந்தனர். இதையடுத்து போலீசார் 2 பெண்களையும், வாலிபரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
பிடிபட்ட வாலிபருக்கு திருமணம் ஆகவில்லை. அவருடன் சிக்கிய 2 பெண்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. பெண்கள் 2 பேரும் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்தனர். அப்போது ஒரு பெண்ணுடன் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் சந்தித்து அவர்கள் உல்லாசம் அனுபவித்து வந்தனர். சம்பவத்தன்று அந்த பகுதி வாலிபர்களின் கண்ணில் பட்டு போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.
போலீசார் அளித்த தகவலின் பேரில் 2 பெண்களின் கணவர்கள் மற்றும் உறவினர்கள் போலீஸ்நிலையம் வந்தனர். கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண், பிடிபட்ட வாலிபரை தான் திருமணம் செய்வேன், அவருடன் தான் செல்வேன் என போலீசாரிடம் தெரிவித்தார். உறவினர்கள் அவரை கண்டித்தனர். இதையடுத்து அவர் தனது முடிவை மாற்றி கணவருடன் செல்ல முடிவெடுத்தார்.
இதேபோல கள்ளக் காதலிக்கு துணையாக வந்த பெண் தனது கணவரை பார்த்ததும் கண்ணீர் விட்டு கதறி அழுதார். என்னை மன்னித்து விடுங்கள், நான் ஒரு தவறும் செய்யவில்லை. தோழி என்னை துணைக்கு அழைத்தார். அவருடன் சென்று மாட்டிக்கொண்டேன் என்று கூறி கண்ணீர் வடித்தார். அவர் சொன்ன வார்த்தைகளை நம்பி கணவரும் ஏற்றுக் கொண்டார்.
பின்னர் 3 பேரையும் போலீசார் எச்சரித்து சிறு வழக்குப்பதிவு செய்து அவர்களை உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தென்தாமரைகுளம் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


0 Comments