Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவின் பிரதமர் கனவுக்கு ஆப்பு வைத்தார் ஜனாதிபதி மைத்திரி

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால திட்டவட்டமாக கூறிவிட்டார். அண்மையில் சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற கட்சி உயர் மட்டத்தினருடனான சந்திப்பின்போதே, ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
அதாவது மஹிந்தவின் தில்லுமுல்லுகளை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கின்றேன். தேர்தலில் நான் வெற்றிபெற்றுவிடுவேன் என்று பயந்ததால் இரண்டு தடவைகள் என்னைக் கொள்வதற்கு சதி செய்திருந்த மஹிந்த ராஜபக்ஷவை எப்படி பிரதமர் வேட்பாளராக நியமிப்பேன்?
அப்படி மஹிந்தவைத்தான் பிரதமர் வேட்பாளராக்க வேண்டுமென விரும்பும் அவரது விசுவாசிகள், கட்சியைவிட்டு விலகி மஹிந்தவோடு இணைந்து கொள்ளலாம் என்றும் அவர் கடுந்தொனியில் கூறியிருக்கின்றார். ஜனாதிபதியின் பேச்சைக் கேட்டு சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களும், அமைச்சர்களும் அதிர்ந்துபோய் இருந்திருக்கின்றார்கள்.
மறு பக்கத்தில் மஹிந்தவை பிரதமராக்கும் திட்டத்தோடு மஹிந்தவுக்கு ஆதரவு திரட்டிக் கொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற வகையறாக்கள் கொதித்துப் போயுள்ளனர்.
சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களாக இருந்தாலும் மஹிந்தவின் விசுவாசிகளாக இருக்கும் சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, டலஸ் அழகப்பெரும, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ போன்றவர்களும் இப்போது சுதந்திரக் கட்சிக்குள் பலவீனமானவர்களாக இருக்கின்றார்கள்.
இவர்களை விடவும் மஹிந்த மிகவும் அதிர்ந்துபோய் இருக்கின்றார். இதுநாள்வரை சுதந்திரக் கட்சியிலிருந்து விலக்கப்போவதில்லை என்றும், சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக தன்னையே நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமென்றும் கனவு கண்டு கொண்டிருந்தார்.
அதேவேளை, ஆரம்பத்திலிருந்தே மஹந்தவை சுதந்திரக் கட்சிக்குள்ளிருந்து வெளியேற்றுவதில் குறியாக செயற்பட்ட சந்திரிக்கா அம்மையாரின் திட்டம் இப்போது சரியான கட்டத்தை எட்டியிருக்கின்றது. இப்போது மஹிந்தவுக்கு மீண்டும் சுதந்திரக் கட்சியூடாக அரசியல் வாழ்க்கை கிடையாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுநாள்வரை சுதந்திரக் கட்சியிலிருந்து தம்மை புறக்கணிக்க முடியாது என்ற இறுமாப்பில் இருந்த மஹிந்த, இப்போது தனது விசுவாசிகளுடன் தனியாக ஒரு அணியை ஏற்படுத்தி தேர்தலில் குதிப்பதா என்பதை பரபரப்பாக ஆலோசிக்கத் தொடங்கியிருக்கின்றார்.
ஆனாலும் சுதந்திரக் கட்சியின் வாக்குகள் மஹிந்தவுக்காவும், மைத்திரிக்காவும் இரண்டாக உடையுமானால் அது எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பாக அமையும் என்ற அச்சம் சுதந்திரக் கட்சியினருக்கும் இருக்கவே செய்கின்றது. ஆனால் மஹிந்தவை விடவும் பிரதமர் ரணிலோடு உறவை வலுப்படுத்துவதையே சந்திரிக்கா அம்மையாரும், ஜனாதிபதியும் விரும்புகின்றனர்.
மறுபுறத்தில் நாடாளுமன்றத் தேர்தலை அவசரமாக நடத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கூறிவந்தாலும், தற்போதை ஆட்சியை முடியுமானவரை இழுத்துக் கொண்டு செல்வதற்கே ஜனாதிபதியும், தற்போதைய ஆட்சிக்கு ஆசிர்வாதம் வழங்கும் நாடுகளும் விரும்புகின்றன.
அதேவேளை இன்னும் சிறிது காலத்துக்கு காலத்தை இழுத்துச் சென்றால் தற்போது இருக்கும் மஹிந்தவின் செல்வாக்கு சரிந்துவிடும் என்றும், மஹிந்தவுக்கு கொடி பிடிக்கும் அவரது விசுவாசிகளும் களைத்துப்போய் விடுவார்கள் என்ற ஆலோசனைகளும் அரசுக்கு வழங்கப்படுகின்றது.
ஆனால் ஆலோசனைகளில் உண்மை இருந்தாலும், செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு சங்கடமான சூழலை தோற்றுவித்துவிடுமோ என்ற அச்சமும் இருக்கவே செய்கின்றது.
அந்த அறிக்கை மஹிந்தவை குற்றவாளியாக அறிவிக்குமாக இருந்தால், மஹிந்த மீண்டும் பெரும்பான்மை சிங்கள மக்களிடம் தனக்கான பாதுகாப்பையும், நியாயத்தையும் கோருகின்ற நிலைமை ஏற்படும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததை மஹிந்த நிகழ்த்திய பெருஞ்சாதனையாகவே சிங்கள மக்கள் இப்போதும் மதிக்கின்றார்கள்.
ஆகவே மஹிந்தவை அதற்கான குற்றவாளியாகப் பார்க்கவோ, தண்டனை கிடைக்கவோ அனுமதிக்கமாட்டார்கள். அத்தகைய சூழலில் பெரும்பான்மை மக்களின் ஆதரவும், அனுதாபமும் மஹிந்தவுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடும்.
அப்படி ஒரு நிலைமை உருவாகாமல் செப்டெம்பர் அறிக்கை இருக்குமா என்பதற்கான உத்தரவாதத்தை இதுவரை அமெரிக்காவோ, ஐக்கிய நாடுகள் சபையோ வெளிப்படுத்தவில்லை. அப்படி உத்தரவாதமளித்தால் மஹிந்தவும் சகாக்களும் இலகுவாக அந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் வாய்ப்பு உண்டாகும்.
இந்த நிலையில் செப்டெம்பர் ஐக்கிய நாடுகள் அறிக்கையை தனக்கு அனுகூலமாக மாற்றிக் கொண்டு வெற்றியை சுவீகரிக்க திட்டமிட்டுப் பணியாற்றுவதில் மஹிந்தவும், அவரது சகாக்களும் அரசியல் நிபுணத்துவம் நிறைந்தவர்கள். அப்படி ஒரு சவாலை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியை விடவும், சுதந்திரக் கட்சியை வழிநடத்தப்போகும் ஜனாதிபதியும், சந்திரிக்கா அம்மையாருமே தம்மை தயார்படுத்திக் கொள்ளவேண்டியிருக்கும்.
இந்தப் போட்டியில் திரைக்குப் பின்னால் சீனாவுக்கும், அமெரிக்கா, இந்தியாவுக்கு இடையிலான பிராந்தியப் போட்டியும் பலமாகவே இருக்கப்போகின்றது.

Post a Comment

0 Comments