Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் அரச உத்தியோகஸ்த்தர் படுகொலை: எச்சரித்தது போன்று கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.



கடந்த 26ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட சமூக சேவைகள் உத்தியோஸ்த்தரின் படுகொலையை கண்டித்தும்,கொலையாளியை விரைவாக கைது செய்யக்கோரியும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மண்டூர் பகுதியில் கடந்த 26ஆம் திகதி சமூக சேவைகள் உத்தியோகத்தர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும், இதுவரையில் கொலையாளிகள் கைதுசெய்யப்படாததை கண்டித்தும் விரைவாக கொலையாளிகளை கைதுசெய்யக்கோரியும்,தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் இந்த கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடாத்தப்பட்டுள்ளது.
இன்று காலை மட்டக்களப்பு,காந்தி பூங்காவுக்கு முன்பாக இந்த கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடாத்தப்பட்டது.
முன்பாக காந்திப்பூங்காவில் இக்கொலையினைக் கண்டித்தும் கொலையாளிகளை கைதுசெய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா,
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,மாகாணசபை பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்னம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து காந்தி சதுக்கத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் ஊர்வலமாக சென்று அங்கு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.
கடந்தவாரம் சமூகசேவைகள் உத்தியோகத்தரின் படுகொலை சூத்திரதாரிகள் ஒரு வாரத்திற்குள் கைதுசெய்யப்படாவிட்டால் போராட்டம் நடாத்தப்போவதாக கூட்டமைப்பு  அறிவித்திருந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
நல்லாட்சியிலும் நாங்கள் தான் பலியா? மட்டக்களப்பில் மதிதயனுக்கு ஆதரவாக போராட்டம்
மட்டக்களப்பு மண்டூரில் சமூக சேவை உத்தியோகஸ்த்தர் சச்சிதானந்தம் மதிதயன் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரியும் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இன்று காலை கவனயீரப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
நல்லாட்சிக்கு அவமானம் எனும் தொனிப் பொருளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்ட பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,
பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியினர், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொலையாட்சியா நல்லாட்சியா?, மண்டூர் மதிதயனின் கொலைக்கு பின்னணி யார்?, மதிதயனின் படுகொலை ஏன்? எதற்கு? யார்?, நல்லாட்சியிலும் நாங்கள் தான் பலியா?, அரசே கொலையாளியை கைது செய்ய ஏன் தாமதம்,
அரசே படுகொலைக்கான தீர்வுதான் என்ன?, நல்லாட்சிக்கு அவமானம், வெட்கம், தலை குணிவு, அரசே கயவனை கண்டு பிடித்து கூண்டில் நிறுத்து, பட்டப் பகலில் படுகொலை படையினரின் கண் இருட்டா?, மைத்திரி ஆட்சியிலும் மறைமுக குண்டர்களா, அரசே முடிவு கிட்டும் வரை முடிவுறாது போராட்டம், அரசே ஆயுத கலாசாரத்தை தடுத்து நிறுத்து எமது பாதுகாப்பை உறுதி செய், ஆட்சி மாறினாலும் சூழ்ச்சி மாறவில்லை, மதியின் கொலைக்கு நீதி வேண்டும் போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தி கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டகாரர்கள் தமது கோரிக்கைள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு மாவட்ட செயலகம் வரை ஊர்வலமாக சென்று மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
குறித்த மகஜரை உரிய நடவடிக்கைகளுக்கான அரசாங்க அதிபரின் கையளிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தெரிவித்தார்.
அவ்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததன் பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு படுகொலைச் சம்பவம் நடைபெற்றிருக்கின்றது.
இச்சம்பவம் 26.05.2015ல் காலையில் வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மண்டூர் எனும் கிராமத்தில் நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்டவர் சச்சிதானந்தம் மதிதயன் என்ற அரசாங்க உத்தியோகத்தர். இக்கொலை சம்பந்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் சென்ற வாரம் ஒரு பத்திரிகையாளர் மாநாடு ஒன்றையும் கூட்டி அரசாங்கம் இக்கொலையின் சூத்திரதாரியை உடனடியாக கண்டு பிடிக்க வேண்டுமெனவும்,
இதற்காக ஒரு கால அவகாசமும் கொடுத்திருந்தோம். படுகொலை நடைபெற்று 2 வார காலமாகியும் இதுவரை சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கவலையடைவதுடன், உடனடியாகக் கொலை செய்தவர்களைக் கண்டு பிடித்து அவர்களை நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென்றும் இன்று மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெற்றது.
போராட்டத்தின் இறுதியில் அரசாங்கமும், பொலிஸாரும் சேர்ந்து இன்னும் தாமதியாது கொலையாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டுமென்றும்; நீதிமன்றில் நிறுத்தப்பட்ட வேண்டுமென்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஆகவே அம்மணியவர்களே தயவு செய்து இத்தீர்மானத்தை அரசாங்கத்துக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவித்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்” என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments