8 வருடமாக காதலித்து, உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த வாலிபரை, பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் கைது செய்தனர்.
உத்தர கன்னட மாவட்டம் குமட்டா பகுதியை சேர்ந்தவர் ராகேஷ்(வயது 28). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 8 வருடத்திற்கு முன்பு உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா அம்மாசபையல் பகுதிக்கு வேலைக்காக வந்தார். அப்போது அங்கு ஒரு இடத்தில் வாடகைக்கு வீடு பிடித்து தங்கினார். இந்த நிலையில் இவருக்கும், அதேப்பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்தனர்.
காதல் ஜோடியினர் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கும் சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர். அப்போது ராகேஷ் தனது காதலியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த இளம்பெண் தன்னை விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி ராகேஷை வற்புறுத்தினார். ஆனால் ராகேஷ் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் அம்மாசபையல் பகுதியில் இருந்து வீட்டை காலி செய்துகொண்டு தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.
தனது 8 வருட காதல் கசந்ததால் அந்த இளம்பெண் மனமுடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் அம்மாசபையல் போலீசில் புகார் செய்தார். அதில் தன்னை தன்னுடைய காதலன் ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததாகவும், தற்போது திருமணத்திற்கு மறுப்பு தெரிவிப்பதாகவும், எனவே தன்னை தனது காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரியும் கூறியிருந்தார்.
புகாரின்பேரில் போலீசார் ராகேஷை அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் அந்த இளம்பெண்ணை காதலித்ததை ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகேஷை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


0 Comments