அமெரிக்காவின் ஹவாய் பகுதியில் அமைந்துள்ள ஹோனோகோஹா துறைமுகம் அருகாமையில் இருக்கும் கடலோரப் பகுதியில் வசித்துவந்த ராண்டி லேன்ஸ்(47) என்பவர் அப்பகுதியின் திறமையான மீனவர் என்ற சிறப்புக்குரியவராக இருந்து வந்தார்.
18 ஆண்டுகளுக்கு மேலாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவந்த இவர், எவ்வளவு பெரிய மீனாக இருந்தாலும் சாமர்த்தியமாக வலைவிரித்து பிடித்து, கரைக்கு இழுத்து வருவதில் பிரபலமானவர். சமீபத்தில் கைலுவா-கோனா கடற்பகுதியில் இவர் மீன் வேட்டைக்கு சென்றபோது, மிகப்பெரிய கத்தி மீன் (ஸ்வார்ட் பிஷ்) ஒன்று இவரது பார்வையில் பட்டது.
கையில் இருந்த தூண்டில் துப்பாக்கியால் அந்த மீனை ராண்டி லேன்ஸ் சுட்டார். முனையில் இருந்த கூரிய ஈட்டி அந்த மீனில் உடலில் பாய்ந்தது. ஆனால், தூண்டிலில் இருந்து விடுபட்டு அந்த மீனை படகுக்கு தூக்கிவரும் கயிறு அதற்குரிய இயந்திரத்தில் இருந்து விடுபடாமல் தகராறு செய்தது. அதற்குள், வலியால் துடித்த அந்த ராட்சத கத்தி மீன், படகுக்குள் எகிறிப் பாய்ந்தது.
வாயில் உள்ள சுமார் மூன்றடி நீள கத்தி போன்ற முன்பகுதியால் அவரது நெஞ்சாங்கூட்டை கிழித்து, குத்தத் தொடங்கியது. உடனிருந்த சக மீனவர்கள் அவரை அந்த மீனிடம் இருந்து காப்பாற்றி முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும், மீனின் தாக்குதலால் நெஞ்சுப் பகுதியில் படுகாயமடைந்த அவர் சில நிமிடங்களில் உயிரிழந்தார்.
0 Comments