யுத்த காலத்துக்கு முன் மட்டக்களப்பு மாவட்டத்தில் குடியிருந்து இடம்பெயர்ந்து சென்ற சிங்கள மக்களை அவர்கள் முன்பு குடியிருந்த அதே இடத்தில் குடியேற்ற கிழக்கு மாகாண ஆளுநர் முயற்சி மேற்கொண்டு வருகின்றார்.
மீள்குடியேற்றப்படாது அடிப்படை வசதிகள் அற்றவர்களாக வாழ்வாதார உபாயங்கள் இல்லாதவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த ஆளுநர் ஏன் வரவில்லை என்ற கடுமையான விசனத்தை வெளிக்காட்டியுள்ளார்கள். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த மாதம் 21 ஆம் திகதி சனிக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ மற்றும் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஸீர் அஹமட், மாகாணக் கல்வி மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ் அமைச்சர் சி. தண்டாயுதபாணி ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்திருந்தனர்.
1983ஆம் ஆண்டை தொடர்ந்து ஏற்பட்ட யுத்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்களை அவர்கள் முன்பு வாழ்ந்ததாக கூறப்படும் இடங்களில் மீளக்குடியேற்ற முடியுமா என ஆராய்வதற்காகவும் முடிவுகளை மேற்கொள்வதற்காகவும் ஆளுநர் தலைமையில் குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார்கள். இவர்களின் வருகையானது ஓர் இனத்தை மையப்படுத்தி அவர்களின் மீள் குடியேற்ற நலன் சார்ந்ததாக இருக்கின்றது என்பது மட்டுமன்றி ஆளுநரினால் கூட்டப்பட்ட இந்த மீள்குடியேற்ற கூட்டத்துக்கு உள்ளூர் அரசியல் தலைவர்களான மாகாண சபை உறுப்பினர்களோ பாராளுமன்ற உறுப்பினர்களோ அழைக்கப்படாமை கவலை தருகின்ற விடயமென தமது விசனத்தை தெரிவித்துள்ளனர். மேற்படி மாகாண சபை உறுப்பினர்களும் பாராளுமன்ற அங்கத்தவர்களும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான இரா. துரைரெட்ணம் ஆளுநரின் மட்டக்களப்பு விஜயம் பற்றி ஊடகங்கள் மூலம் இப்படியொரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். போரினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண தமிழ் மக்களை முறையாக மீள்குடியேற்றம் செய்யாமல் இழுத்தடிப்புக்களை மேற்கொண்டு வரும் மத்திய அரசாங்கமும் கிழக்கு மாகாண சபையும் போர் சூழல் நிலவிய கால கட்டத்தில் தமது நிலங்களை அதிக பணத்துக்கு விற்பனை செய்தவர்கள் நம்பிக்கையின் அடிப்படையில் தமிழர்களிடம் தமது காணிகளை கைமாறி சென்றவர்களான சிங்கள மக்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்து காணிகளை வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் முன்வந்துள்ளமை அதிர்ச்சியை தரும் விடயமாகுமென குறிப்பிட்டிருந்தார்.
இதேபோன்றதொரு சீற்றத்தை பின்வருமாறு வெளிக்காட்டியுள்ளார் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன். அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் இருந்த சிங்கள மக்களின் தரவுகளைத் திரட்டி அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான ஒரு முயற்சியாகவே கலந்துரையாடல் செய்ய ஆளுநர் மட்டக்களப்புக்கு வந்துள்ளார். ஆளுநர் மட்டக்களப்புக்கு வருவது தொடர்பாக த.தே. கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ மாகாண சபை உறுப்பினர்களுக்கோ அறிவிக்கப்படவில்லை. அவருடன் உடன் வந்தவர்களும் எங்களுக்கு அறிவிக்கவில்லையென குற்றம் சுமத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவித்திருந்ததாவது சிங்கள மக்களை குடியேற்றுவதற்கு முன் தமிழ் மக்களுக்கான மீள்குடியேற்றத்தையும் புனர்வாழ்வையும் இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.
சிங்கள மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்துக்கு முன்னைய காலத்தில் வாழ்ந்திருக்கின்றார்களா? என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜாவை விடம் கேட்ட போது அவர் விளக்கம் தந்தார். யுத்த காலத்துக்கு முன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாசிக்குடாவிலும் மட்டக்களப்பு நகரப்பகுதிகளில் சில இடங்களிலும் ஏறாவூர் பிரதேசத்தில் புன்னைக்குடா விலும் அவர்கள் குடியிருந்தார்கள். யுத்த நிலை காரணமாக தமது நிலங்களை பெறுமதியான விலைக்கு விற்பனை செய்து விட்டுச் சென்று விட்டார்கள் என்று குறிப்பிட்டார்.
சம்பூர் குடியேற்றம் முடுக்கி விடப்பட்ட சூழ்நிலையில் யுத்த காலத்துக்கு முன் குடியிருந்த சிங்கள மக்களை மீளக்குடியேற்றும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஆளுநர் கல்குடா வலைவாடியில் முன்னைய காலங்களில் குடியிருந்த சிங்கள மக்களை குடியேற்றும் நோக்குடன் வாழைச்சேனை பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் அதேபோன்று ஜெயந்திபுர மக்களின் குடியேற்றம் சம்பந்தமாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் புல்லுமலை மங்கலகம, கோப்பாவெல, புன்னைக்குடா ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்த சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் பற்றி ஆராய்வதற்கென செங்கலடி பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
இக்கலந்துரையாடலில் சிங்கள மக்களுக்கான மீள்குடியேற்ற விவகாரம் மட்டுமே ஆராயப்பட்டிருக்கின்றன. இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஸீர் அஹமட் மாகாண கல்வி மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி உடன் இருந்துள்ளனர்.
மூன்று இடங்களிலும் நடைபெற்ற கூட்டத்தின் போது குடியிருந்து விட்டு தமது காணிகளை பெறுமதியான விலைக்கு விற்பனை செய்து விட்டு சென்ற சிங்கள மக்கள் தமக்கு மிக நெருக்கமாக தெரிந்தவர்களிடம் காணிகளையும் வீடுகளையும் ஒப்படைத்து சென்றவர்கள் பயத்தின் காரணமாக இடம்பெயர்ந்து சென்றவர்கள் என்பன இதன்போது தமிழ் மக்கள் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டிருக்கின்றன. இந்த விவகாரங்களில் ஆளுநர் பொறுப்பாகவும் நிதானமாகவும் நடந்து கொண்டார் என்று பேசப்படுகின்றது. தமது சொந்த நிலங்களை பெறுமதியான விலைக்கு விற்றுச் சென்ற சிங்கள மக்களின் காணிகளை மீளப்பெற முடியாது. மீளப்பெற்று தருவதற்கு சட்டத்தில் இடமில்லையெனக் கூறியதுடன் இடம்பெயர்ந்த சிங்கள மக்களின் காணிகளையோ வீடுகளையோ தமதாக்கிக்கொண்ட தமிழ் முஸ்லிம் மக்களின் விவகாரம் தொடர்பாக ஆராயப்பட வேண்டும். இவர்களுக்கு மாற்று காணிகளை வழங்குவதற்கு வாய்ப்பிருக்கிறதா என ஆராயும் படியும் விசாரணைகளை மேற்கொள்ளும்படியும் ஆளுநர் தமது அதிகாரிகளுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் பணித்து விட்டு சென்றுள்ளார்.
ஆளுநரின் மட்டக்களப்புக்கான இந்த விஜயமானது பலமுனைப் பிரச்சினைகளை உருவாக்கியிருக்கின்றது. தனியொரு இனத்தின் மீள்குடியேற்றத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு ஆளுநரின் விஜயம் அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டு ஒருபுறமும், இந்த கலந்துரையாடலுக்கு உள்ளூர் அரசியல் வாதிகளோ பாராளுமன்ற உறுப்பினர்களோ அழைக்கப்படாமை மறுபுறமும் குற்றச்சாட்டாகவும் ஆளுநருடன் வந்திருந்த கிழக்கு மாகாண முதல் அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் உள்ளூர் அரசியல் தலைவர்களை உதாசீனம் செய்து விட்டார்கள் என்பது இன்னொரு புற குற்றச்சாட்டாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
கிழக்கு மாகாணம் மூவின மக்களும் சமமாகவும் சமத்துவமாகவும் வாழ்கின்ற பிரதேசம். அந்த வகையில் தமது கடமை ஏற்பு நிகழ்வுக்கு பிறகு முதல் தடவையாக மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ. சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாக ஆராய்வதற்கு மட்டுமே வருகை தந்துள்ளார். இம்மாவட்டத்தில் வாழ்கின்ற ஏனைய மக்களின் பிரச்சினை பற்றி கேட்டறிய வரவில்லை.
ஏனைய சமூகங்களை கண்டும் காணாத சமூகங்களாக பார்க்கின்றாரா? என மாகாண சபை உறுப்பினர் இந்திரகுமார் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து கூறுகையில் மட்டக்களப்பு மாவட்டம் யுத்த கெடுபிடிகள் காரணமாக முற்றாக பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம். ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து யுத்த காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் மீள்குடியேற்றப்பட்ட போதும் முறையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. உரிய வாழ்வாதாரங்களுக்கு வழிகாட்டப்படவில்லை. இவ்வாறு இருக்கும் போது ஓரினத்தின் மீள்குடியேற்றத்திலும் புனர்வாழ்விலும் அக்கறை செலுத்திக் கொண்டு ஆளுநர் குழாம் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தமை விசனத்தை உண்டு பண்ணும் செயலாகுமெனவும் குறிப்பிட்டார்.
சம்பூர் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு உத்தரவு வழங்கியுள்ள ஜனாதிபதி நிலைமையை சமப்படுத்துவதற்காக மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டு சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாக கவனம் செலுத்த கட்டளையிட்டதற்கு அமையவே கிழக்கு ஆளுநர் தனது முதல் விஜயத்தை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மேற்கொண்டுள்ளார்.
ஆளுநரின் மட்டு. நகர் விஜயத்தின் இன்னுமொரு பக்க விளைவாக காணப்படுவது உள்ளூர் அரசியல் தலைவர்களையோ பிரமுகர்களையோ அழைக்கவில்லையென்ற குற்றச்சாட்டாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அத்துடன் மாகாண சபை உறுப்பினர்கள் 6 பேர் அங்கம் வகிக்கின்றார்கள். யாருக்குமே உத்தியோகபூர்வ அழைப்பு ஆளுநராலோ அல்லது முதலமைச்சராலோ விடப்படவில்லையென்பது அம்மாவட்டத்தை சேர்ந்த அரசியல் பிரதிநிதிகளுக்கு கடும் சீற்றத்தை உண்டு பண்ணியிருக்கிறது. இந்த அழைப்பின்மை தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ப. அரிய நேத்திரன் ஆளுநர் மட்டக்களப்புக்கு வருவது தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ மாகாண சபை உறுப்பினர்களுக்கோ அறிவிக்கப்படவில்லை. ஆளுநர் வருவதை விரும்புகிறோம். ஆனால் சிங்கள மக்களை குடியேற்றுவதற்காகவோ காணிகளை விற்பனை செய்து விட்டுச் சென்ற சிங்கள மக்களுக்கு மீண்டும் அந்த காணிகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் வர முயல்வது தவறு. முன்னாள் ஜனாதிபதி போல் அவர் செய்த வேலையை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து செய்ய முனைவாரானால் அவருக்கு வழங்கி வரும் ஆதரவை மீள்பரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
உள்ளூர் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லையென்ற பிரச்சினை தமிழ்த்தேசியக் கூட்டுத்தரப்பினருக்கிடையே கசப்புணர்வையும் அதிருப்தியையும் கூட ஏற்படுத்தியுள்ளது என்ற கருத்து தெரிவிக்கப்படுகிறது. மாகாண அமைச்சரான எஸ். தண்டாயுதபாணி மேற்படி அழைப்பை தமக்கு விட்டிருக்கலாம். தெரிவித்திருக்கலாம். உள்ளூர் அரசியல் தலைவர்களுடன் கலந்து பேச வேண்டிய வாய்ப்பை உருவாக்கியிருக்கலாம். ஆனால் எல்லாமே உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது என மட்டு. நகர் பிரதிநிதிகள் கவலையுடனும் அதேவேளை ஆவேசத்துடனும் கூறியிருந்தார்கள்.
அதுவுமன்றி 66 வருட அரசியல் புரட்சியின் உள்ளீடுகளாக அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்ட கிழக்கு மாகாண மீள்குடியேற்ற அமைச்சர் தனது மட்டக்களப்பு விஜயத்தின் போது தமிழ் மக்கள் சார்ந்த எந்த ஒரு பிரச்சினையையும் பேச முன் வரவில்லை. எந்த மக்களையும் சந்திக்கவில்லை. பாதிக்கப்பட்ட எந்த கிராமத்துக்கும் போக எண்ணவில்லை. ஒரு துளி நேரத்தைக் கூட தமிழ் மக்களின் சார்பாக செலவழிக்காமல் ஆளுநரின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடந்து கொண்டது கவலை தரும் விடயமாகவும் விசனப் புள்ளியாகவும் இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார் தர்மரெட்ணம் ஆகியோர் தெரிவித்தனர்.
இது ஒரு புறமிருக்க முதல் அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் கிழக்கின் முதல் அமைச்சர் என்ற வகையில் முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் பற்றி ஆளுநரிடம் வலியுறுத்தியிருக்கலாம். அவர்களின் வாழ்வாதாரங்கள் புனர்வாழ்வு பற்றி தெளிவு படுத்தியிருக்கலாம். எதையுமே முன்னெடுக்காமல் நல்ல பிள்ளைக்கு நடிக்கும் நோக்கில் சிங்கள குடியேற்றத்தை மட்டும் பேசுவதற்காக ஆளுநருடன் வருகை தந்திருந்தமை முஸ்லிம் மக்களின் நலனில் அக்கறை காட்டாமையை புலப்படுத்துகின்றது என முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கவலை தெரிவித்தார். இதேவேளை கிழக்கு முதல் அமைச்சரின் இன்னுமொரு வகை இரகசியச் செயற்பாடு இனப்பாகுபாட்டை வெளிப்படுத்தும் செயலாக காணப்படுகிறது என பிரசன்னா தெரிவித்தார். அதாவது ஆளுநருடன் வருகை தந்திருந்த கிழக்கின் முதலமைச்சர் புன்னைக்குடா மக்களை அழைத்து ஆளுநருடன் சந்திக்க வைத்துள்ளார். வந்தவர்கள் வேறு யாருமில்லை முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள். இந்த சந்திப்பு ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால் தமிழ் மக்களோ உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களோ ஆளுநரைச் சந்திப்பதற்குரிய வாய்ப்பை யாரும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. மாலை மரியாதைகளையும் மங்கலமான கேளிக்கைகளையும் எதிர்பார்த்து வருகின்றார்களே தவிர பாதிக்கப்பட்ட மக்களின் மீட்சிக்காக யாரும் வருவதாகத் தெரியவில்லையெனக்கூறினார் பிரசன்னா. இவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் கிழக்கு மாகாண உதவி தவிசாளராக பிரேரிக்கப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்களுடனான சந்திப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது உரையாற்றிய கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி இவ்வாறு கூறியிருந்தார். இந்த நாட்டில் காணிகளை விட்டு வெளியேற்றப்பட்ட அல்லது பல காரணங்களுக்காக வெளியேறியவர்கள் தமிழ் மக்களே. போர் காரணமாகவும் வேறு பல காரணங்களினாலும் காணிகளை விட்டு வெளியேறிய தமிழ் மக்கள் இன்னும் கூட காணிகள் அற்ற நிலையிலேயே உள்ளனர். கிழக்கு மாகாணத்தில் கூட அவ்வாறான நிலையே இருந்து வருகிறது என குறிப்பிட்டிருந்தார்.
ஆளுநரின் மட்டக்களப்புக்கான விஜயத்தையொட்டி மேற்படி சம்பவங்கள் சில உள்ளக முரண்பாடு
களை உண்டாக்க முனைந்துள்ளன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அமைச்சர்களினதும் கட்சித் தலைவர்களினதும் பகிரங்கப்படுத்தப்படாத வருகைகளும் திக்கு விஜயங்களும் உட்கட்சி பூசல்களை உண்டாக்கப் பார்க்கின்றன. என்பது ஒரு புறம் இருக்க சமத்துவமான பார்வையின்மை அல்லது நோக்கமின்மை இனத்துவ முரண்பாடுகளை மீண்டும் தூண்டி விட மூல காரணமாகி விடுகிறது. என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாண சபையின் உறுப் பினரான இரா. துரைரெட்ணம் தான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறியிருக்கும் விடயங்கள் ஆக்கி ரோஷம் நிறைந்தவையாக காணப் பட்டாலும் ஆழமாகப் பார்க்கும் போது அதில் காத்திரமான உண்மை கள் புதைந்துள்ளன என்பது வெளிப்
படை. கிழக்கு மக்களின் மீள்குடி யேற்றம் தொடர்பாக எட்டுத்தடவை மகஜர் அனுப்பியும் பலன் காண முடியவில்லை. பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஒருபுறமிருக்க தென்னிலங்கை யைச் சேர்ந்த சிங்கள மக்களை மீள்கு டியேற்றம் செய்ய கூட்டப்பட்ட கூட்
டத்தை எம்மால் ஜீரணிக்க முடி யாது. 1983 ஜூலை கலவரம் இடம்
பெற்ற காலத்தில் தமது வீடுவாசல் களையும் காணிகளையும் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து
விட்டு தமிழர் கொழும்பை விட்டு
வெளியேறியுள்ளனர். அவர்களின் காணிகளை ஆளுநரோ முதல் அமைச்
சரோ கல்வி அமைச்சரோ மீளப் பெற்றுத் தர முடியுமா? மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் வெளியேற்றப்பட்ட தமிழர்களுக்கு காணிகள் வழங்கப் படவில்லை. மட்டக்களப்பு மாவட் டத்தில் எல்வத்தைமடு மருதங் கேணிக்குளம் பெரியபுல்லுமலை வலையிறவு ஏறாவூர் நகர் உள்
ளிட்ட இடங்களிலுள்ள சுமார்
400க்கும் அதிகமான குடும்பங் களுக்கு மாற்றுக்காணிகள் வழங்கப் படாமலும் மீள்குடியேற்றம் செய்யப் படாமலும் உள்ளமை போன்ற பல விடயங்களை துரைரெட்ணம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை தார்மீகமான வினாக்கள். எவ்வாறான கட்சி விரிசல்களையும் இன முரண்பாடுகளையும் வளர்த்துக்
கொள்ளாத வகையில் அமைச் சர்களும் தலைவர்களும் அதிகாரி களும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.


0 Comments