ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி அருகே நேற்று அதிகாலை செம்மரம் வெட்டி கடத்தியதாக கூறி 20 தமிழக தொழிலாளர்கள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தென் இந்தியாவில் இது போன்று ஒரே நாளில் ஒரே இடத்தில் 20 பேர் போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டது இல்லை. கொல்லப்பட்ட 20 பேரும் அப்பாவி ஏழைத் தொழிலா ளர்கள் என்பதால் தமிழ் நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படுகொலைக்கு தமிழக தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள் ளனர்.
மத்திய அரசு இது பற்றி விளக்கம் அளிக்க ஆந்திர மாநில அரசுக்கு உத்தர விட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையமும் ஆந்திர மாநில அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதைய டுத்து ஆந்திர மாநில போலீ சார் நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்த நிலையில் 20 தமிழர்களும் ஆந்திர மாநில போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட வில்லை. அவர்கள் 20 பேரும் திட்டமிட்டு பிடித்து வைத்து சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆந்திர போலீசார் போலி என்கவுன்டர் நாடகம் நடத்தி இருப்பதற்கான ஆதாரங்களும் வெளியாகி உள்ளது.
கொலை செய்யப்பட் டுள்ள இடத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 200 பேர் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்ததாகவும் அவர்களை பிடிக்க முயன்ற போது அவர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியதாகவும் எனவே துப்பாக்கியால் சுட வேண்டியதாகி விட்டது என்று போலீசார் கூறியுள்ளனர். ஆனால் துப்பாக்கி சூடு நடந்த 2 இடங்களிலும் அதற்கான அறிகுறிகளே காணப்படவில்லை.
போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய இடத்தில் செம்மரங்களே இல்லை. அந்த இடத்தை சுற்றி சுமார் 5 கிலோ மீட்டர் அளவுக்கு சாதாரண முள் காடுகளே உள்ளது. எனவே போலீசார் 20 தமிழர்களையும் வேறு எங்கோ ஒரு இடத்தில் பிடித்து வைத்து சுட்டுக் கொன்று இருக்கலாம் என்றும் பிறகு 20 பேரின் உடல்களையும் இந்த காட்டுக்குள் எடுத்து வந்து போட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் 20 தமிழர்கள் உடல்கள் கிடந்த இடத்தில் அவர்கள் வெட்டியதாக கூறப்படும் செம்மர கட்டை கள் கிடந்தன. அந்த கட்டை களை ஆய்வு செய்த போது அவை சுமார் 1 மாதத்திற்கு முன்பு வெட்டப்பட்ட செம்மரக்கட்டைகள் என்று தெரிய வந்துள்ளது.
அந்த செம்மரக் கட்டை களில் போலீசார் வழக்கு எண் பதிவு செய்து எழுதி இருந்ததும் அந்த எழுத்துகளை அழித்திருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 தமிழர்களும் செம்மர கட்டைகளை கடத்தியதாக போலியாக போலீசார் நாடகம் ஆடி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களின் உடலில் நிறைய தீக்காயங்களும் காணப்பட்டன. மேலும் அடித்து சித்ரவதை செய்யப் பட்டதற்கான அறிகுறிகளும் 20 தமிழர்களின் உடலில் உள்ளது. இதன் மூலம் கொல்லப்பட்ட 20 தமிழர் களும் கடந்த வாரமே போலீசாரிடம் சிக்கி இருக்கலாம் என்றும் அவர்களை போலீசார் வேறு ஒரு இடத்தில் வைத்து அடித்து சித்ரவதை செய்து பிறகு சுட்டுக் கொன்று இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படு கிறது.
20 பேர் கொலையில் எழுந்துள்ள இந்த சந்தேகங் களுக்கு ஆந்திர போலீசாரால் விளக்கம் அளிக்க முடிய வில்லை. இதனால் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதில் ஏராளமான மர்மங்கள் உள்ளதாக தெரிகிறது.
கொல்லப்பட்டவர்களில் சிலரை போலீசார் பிடித்து சென்றதற்கான ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. எனவே 20 தமிழர்கள் திட்டமிட்டு பிடித்து வைத்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி முழுமையான விசாரணை நடத்தினால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரியவருகிறது.


0 Comments