தேசிய காங்கிரஸ் கட்சியினதும் அதன் தலைவரான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வினதும் அரசியல் நிலைவரம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இன்றைய நல்லாட்சி அரசின் முக்கிய சக்திகளில் ஒருவர் கூட அதாவுல்லாஹ்வையோ அவரது கட்சியையோ அனுதாபத்துடன் பார்க்கிறார்கள் இல்லை.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவுக்கு ஆதரவாகவும் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகவும் பலர் செயற்பட்டாலும் இன்று அவர்களில் பலரும் புதிய நல்லாட்சி நிர்வாகத்துடன் மறைவாகவோ இன்றேல் பகிரங்கமாகவோ தொடர்பை பேணி வருகின்றனர்.
ஆனால், அதாவுல்லாஹ்வின் நிலைமை அவ்வாறில்லை. நல்லாட்சி அரசின் முக்கியஸ்தர்களை அவராக நாடிச் சென்றாலும் கூட அவரை அணைத்துக் கொள்ள யாரும் இல்லாத ஒரு தனிமைப்பட்ட தேசிய அரசியலில் இன்று அவர் சிக்குண்டுள்ளார்.
இதற்கு மேலாக அவரது கட்சியைச் சேர்ந்த உதுமாலெவ்வை கூட கிழக்கு மாகாண சபையின் புதிய அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. ஆக, மத்திய, மாநில அரசுகளில் அவர்களுக்கு அதிகாரம் இல்லாத ஓர் ஒதுக்கல் அல்லது வஞ்சிக்கப்பட்ட நிலைமைதான் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அதாவுல்லாஹ் ஒரு சக்திமிக்க அமைச்சர் என்பதனை மறக்க முடியாது. அதனைப் பயன்படுத்தி அவர் அவரது பிரதேசத்துக்கேனும் சிலவற்றைச் செய்துள்ளார்தான்.
இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் அவர் மஹிந்தவை ஆதரித்தே நின்றார். முஸ்லிம் வாக்களார்கள் வேறான முடிவை எடுத்திருந்த போதும் அதனை அறியாதவர் போன்று அதாவுல்லாஹ் முன்னாள் ஜனாதிபதியைக் கண்மூடித்தனமாக ஆதரித்தார். ஆனால், மக்கள் நிராகரித்து விட்டனர். அதன் பலாபலன்களே இன்று அந்தக் கட்சியையும் கட்சியைச் சேர்ந்தவர்களையும் சென்றடைந்து கொண்டிருக்கின்றன.மத்தியிலும் ஒன்றுமில்லை..மாநிலத்திலும் ஒன்றுமில்லாத வெறுமை நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மக்களது உணர்வுகளை மதிக்காது, அவர்களது அபிலாஷைகளைப் புரிந்து கொள்ளாமல் தாங்கள் எடுக்கும் முடிவுக்கு மக்கள் கட்டுப்படுவார்கள் என்று அரசியல்வாதிகள் எண்ணி எதனையும் தீர்மானித்த காலம் இன்றில்லை என்பதற்கு ஓர் அடையாளமாக அதாவுல்லாஹ்வுக்கு கிடைத்த இந்த படிப்பினை அனைவருக்கும் பாடமாகட்டும்.
இன்னுமொரு விடயத்தையும் அதாவுல்லாஹ் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆகாயம் பரந்தது என்பதற்காக விமானம் விரும்பியபடி எப்படியும் பறக்கலாம் என்பது நியதியல்ல… அப்படி நினைத்தால் அது மடைமை. இதனை அவர் புரிந்து கொள்ளட்டும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கள மக்களின் செல்வாக்கைப் பெற்றவர் என்பதற்காக சிறுபான்மை இன மக்களின் ஆதரவு இன்றியே இன்னும் ஒரு தடவை வெற்றியடைவார் என அவர் நினைத்து செயற்பட்டது மகாதப்புதான்.
ஆக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஜோதிடரை நம்பியதால் தோற்றுப் போனார். அதாவுல்லாஹ்வோ மஹிந்த ராஜபக்ஷவை நம்பி தோற்றுப் போனார்.
0 comments: