வடமாகாணசபையின் ஆளுனராக மீண்டும் சந்திரசிறி அவர்கள் நியமிக்கப்பட்டதானது இந்த அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கினையே மீண்டும் வெளிக்காட்டி நிற்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
வடக்கு கிழக்கு மாகாணசபைகளின் ஆளுனராக இராணுவ அதிகாரிகள் உள்ளது தொடர்பில் கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துவந்ததுடன் அவர்களை மாற்றி சிவில் அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துவந்தோம்.
|
வடமாகாணசபையின் ஆளுனர் சந்திரசிறியை அதில் இருந்து நீக்க வேறு ஒரு சிவில் அதிகாரியை நியமிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஜனாதிபதியிடம் விடுத்தவேண்டுகோளையும் ஏற்று ஆளுனரை மாற்றுவதாக பலதடவை உறுதியும் அளித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த உறுதி மொழியையும் மீறி மீண்டு;ம் சந்திரசிறி ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளதானது அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கினையே காட்டுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் வடமாகாணசபை ஆளுனராக சந்திரசிறியை நியமித்தமை தொடர்பில் கடும் கண்டனத்தினையும் அதிருப்தியும் தெரிவித்துக்கொள்கின்றது.
சர்வதேசத்துக்கு ஒரு முகத்தினையும் இலங்கை மக்களுக்கு ஒரு முகத்தினையும் தமிழ்மக்களுக்கு வேறோர்முகத்தையும் காட்டிவரும் இந்த அரசாங்கம் மீண்டும் தனது இனவாத முகத்தினை இந்த நாட்டு மக்களுக்கு காட்டியுள்ளது.
ஊவா மாகாணசபை கலைக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள சிங்கள மக்களின் வாக்குகளை பெறும் நோக்கில் தமது அரசாங்கத்தினை சிங்கள இனவாத அரசாங்கமாக காட்டிக்கொள்ள அரசாங்கம் முற்படுகின்றது.இனவாதமூடாகவே சிங்கள மக்களின் வாக்குகளைபெறும் மகிந்த அரசு ஊவாமாகாணதேர்தலையும் வடமாகாண ஆளுநரின் நியமனம் மூலம் இனவாத்தின் இறுக்கத்தை வெளிக்காட்டியுள்ளது.
இந்த வேளையில் அரசாங்கத்தின் இவ்வாறான கபடத்தனமான செயற்பாடுகளை அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் ஊதுகுழலாளர்கள் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.எமது இனத்தின் இன்றைய நிலைமையை அவர்கள் சிந்திக்கவேண்டும்.
ஒரு தமிழரைக்கூட அல்லது இராணுவம் அல்லாத ஒருவரைஆளுனராக தமிழ் பிரதேசங்களில் நியமிக்க மறுக்கும் இந்த அரசாங்கத்தில் இருந்து தமிழ் மக்கள் தங்களது உரிமையினை எவ்வாறு பெற்றுக்கொள்ளமுடியும் என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும்.
இந்தவேளையில் அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இந்த நாட்டில் தமிழ் மக்கள் மீதான ஓடுக்குமுறைகள் மீண்டும் ஒரு முறை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும் என்றார்.
|
0 Comments