மாவீரர் தினத்தினை அனுஷ்டித்தால் வடக்கின் தமிழர்களையும் புலிகளென்றே கருத வேண்டிவரும். மாவீரர் தினம் என்றவொன்றினை மறப்பதே தமிழர்களுக்கு நல்லதென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் முட்டாள்தனமாக செயற்படக்கூடாது. தீவிரவாதத்தினை மீண்டும் உருவாக்காத வகையில் செயற்படுவதே நாட்டிற்கு நல்லதெனவும் அவ் இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கருத்துத் தெரிவிக்கையில், தீவிரவாதிகளுக்கென ஓர் தினத்தினை இலங்கையில் அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முப்பது வருடகால யுத்தத்தினை நிறைவிற்குக் கொண்டுவந்த எமது இராணுவத்தினரை கொச்சைப்படுத்தவே கூடாது. நாட்டிற்கு நன்மை செய்தவர்களுக்கு தினம் அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் பிரபாகரன் மற்றும் ஏனைய புறத் தீவிரவாதிகளுக்கு ஒரு தினத்தினை அனுஷ்டிப்பதனால் இலங்கையில் இன்றும் விடுதலைப் புலிகள் வாழ்கின்றனர் என்பதையே வெளிப்படுத்துகின்றது.
|
வடக்கில் உள்ள தமிழர்கள் விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தினை அனுஷ்டித்தால் வடக்கு தமிழர்களையும் புலிகளென்றே கருதவேண்டும். தீவிரவாதிகளுக்கு ஆதரவான நினைவஞ்சலிகளை தீவிரவாதிகள் மட்டுமே அனுஷ்டிப்பர். நாட்டை நேசிக்கும் எவரும் இவ்வாறு நடந்து கொள்ளமாட்டார்கள். இந்த நாட்டில் தமிழர்கள் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ வேண்டுமாயின் மாவீரர் தினத்தினை மறந்துவிட வேண்டும். மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தவறினை விடக்கூடாது. சர்வதேசத்தின் பேச்சிற்கு பயந்தோ அல்லது சலுகைகளுக்கு அஞ்சியோ இந்த நாட்டினை இழந்துவிடக்கூடாது. இந்த நாட்டில் சிங்கள இனத்தவரே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அவர்களின் நிலையினை அரசாங்கம் புரிந்து கொள்ளவேண்டும்.
வட மாகாண சபைத் தேர்தலினை நடத்தியமையே அரசாங்கம் செய்த பெரிய தவறு. பிரிவினையினை ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தினை வடக்குத் தேர்தலின் மூலம் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலம்பெயர் தமிழர்களுடனும் சர்வதேச சக்திகளுடனும் ஒன்றிணைந்து அரசாங்கத்தினை கவிழ்க்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றனர். இதற்கு இன்று ஐக்கிய தேசியக் கட்சியும் சில அமைப்புக்களும் துணை போகின்றன. இதனை ஜனாதிபதி புரிந்து கொள்ளவேண்டும்.
விடுதலைப் புலிகளின் தீவிரவாத யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வந்ததோடு நாட்டின் பாதுகாப்பினைக் குறைத்தால் மீண்டுமொரு யுத்தம் எவ்விதத்திலாவது ஆரம்பிக்கும். இதற்கான சந்தர்ப்பத்தினை அரசாங்கம் ஏற்படுத்திவிட்டுவிடக் கூடாதெனவும் அவர் தெரிவித்தார்.
|
0 Comments