கூட்டமைப்பு அரசியல் அமைப்பை மீறிச் செயற்பட முடியாது
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல் அமைப்பை மீறிச்செயற்பட முடியாது என தெரிவித்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் அவர்கள் சத்திபிரமாணம் செய்ய எடுத்த முடிவு அதனை உணர்த்துவதாகவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான வீட்டுக்கடன் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், வடக்கில் இன்று அரசாங்கம் சுதந்திரமான தேர்தல் ஒன்றினை நடத்திக்காட்டியுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை வட மாகாண முதலமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் பதவியேற்கவுள்ளார்.
கடந்த சில வாரங்களாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பதவியேற்பு குறித்த பல வாய்ச்சவாடல்களை விடுத்தனர். அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி முன்பாகவே பதவியேற்கமுடியும். அரசியலமைப்பினை மீறிச்செயற்பட முடியாது.
ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள தீர்மானித்ததன் மூலம் அதனை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
13வது அரசியல் அமைப்பு மாற்றுவது தொடர்பில் கடந்த காலத்தில் பல்வேறு கருத்துகள் பறிமாறப்பட்டன.அரசாங்கத்துக்குள் அமைச்சராக இருக்கும் நான் அதனை எதிர்த்தேன். நான் மட்டுமே அரசாங்கத்துக்கள் இருந்து அதனை எதிர்த்தேன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்களை விட எனக்கு தமிழ் உணர்வு அதிகமாகவுள்ளது. நாங்களும் கடந்த 30வருடமாக தமிழினத்துக்கு ஆயுதம் தூக்கி போராடி இரத்தம் சிந்தியவர்கள். நாங்கள் போராட்ட வடிவத்தினையே மாற்றியுள்ளோம். அதன் மூலமே எமது உரிமையினை பெறமுடியும்.
கிழக்கு மாகாணத்தினை யாரும் எப்போதும் புறக்கணித்து செயற்படமுடியாது. புறக்கணிக்கவும் முடியாது. நாங்கள் பொருளாதாரம், கல்வியில் வளர்ச்சி பெறும்போதே சிறந்த சமூகமாக மாறமுடியும்.
இன்று இங்கு எந்தவித கெடுபிடிகளும் இல்லை. எத்தனை மணிக்கும் யாரும் எங்கும் சென்றுவரக்கூடிய சூழ்நிலையுள்ளது. நாங்கள் மற்றவர்களை குறை கூறிக்கொண்டே இருக்கும்போது எமது குறைகளை நாங்கள் திருத்தவதும் இல்லை பார்ப்பதும் இல்லை. நாங்கள் எங்களில் உள்ள குறைகளை முதலில் தீர்க்கவேண்டும் என்றார்.
0 Comments