பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன்சிங் பங்கேற்கமாட்டார் - ரைம்ஸ் ஒவ் இந்தியா
கொழும்பில் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மாகன்சிங் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும், இந்தியாவின் சார்பில் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி கொழும்புக்கு அனுப்பப்படலாம் என்றும் ரைம்ஸ் ஒவ் இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது. பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ள நிலையில், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், இந்த மாநாட்டில் பங்கேற்பதில் இருந்து விலகிக் கொள்ளலாம். பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்க திமுக வலியுறுத்தி வருகின்ற நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் இதனை ஆதரிக்கின்றனர்.
இந்தநிலையில், இந்தியாவின் சார்பில் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி மற்றும் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்கலாம் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்தமாதம், பிரதமரும், ஏனைய காங்கிரஸ் மூத்த தலைவர்களும், இந்தவிவகாரம் குறித்து கலந்துரையாடியதாகவும், பிரதமர் மாநாட்டில் பங்கேற்பது விரும்பத்தக்கதல்ல என்று தாம் அந்தக் கூட்டத்தில், சுட்டிக்காட்டியதாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். துணைக்குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியை கொழும்பு மாநாட்டில் பங்கேற்குமாறு, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக் கொள்ளக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடைசியாக 2011 ம் அண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த பொதுநலவாய மாநாட்டிலும் இந்தியாவின் சார்பில் ஹமீத் அன்சாரியே பங்குபற்றியிருந்தார். அதேவேளை, தான் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பேன் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் அண்மையில் இலங்கை சென்றிருந்த போது கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: