அரசாங்கத்திலிருந்து 59 பேர் வெளியேற திட்டம்!
அரசாங்கத்தில் உள்ள 59 உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற தயாராகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயா கமகே தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராக கட்சியை வலுப்படுத்துவதற்கு அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலிருந்து தான் விலக தயாராகவிருப்பதாகவும் அதற்கு தகுந்தவர்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளதாக தயா கமகே சுட்டிக் காட்டினார்.
மாத்தறை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தயா கமகே, சமாதான பேரணிக்கு துப்பாக்கி, பொல்லுகள் தேவையில்லை என குறிப்பிட்டார்.
நேற்று பலர் தமக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி ஏன் இத்தகைய பேரணிக்கு அனுமதி வழங்கினீர்கள் என வினவியதாக அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் ஆலோசனையின் படி மைத்திரி குணரத்னவின் தந்தை ஹேமன் குணரத்ன, தென் மாகாணசபை உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தயா கமகே தெரிவித்தார்.
மைத்திரி குணரத்னவின் தந்தை பாதுகாப்புச் செயலருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகவும் அழைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாத சந்தர்ப்பத்தின்போது ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாகவும் சம்பவ இடத்திலிருந்தவர்கள் தம்மிடம் தெரிவித்ததாக தயா கமகே குறிப்பிட்டார்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் தனிப்பட்ட பிரச்சினையை கொண்டுள்ள தனியார் ஊடகம் ஒன்று இந்த எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தயா கமகே மேலும் கூறினார்.
0 comments: