குத்துக்கரணம் அடித்த கிபீர் விமானங்கள்: மக்கள் பதறி ஓட்டம் !
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை காலை கிபீர் விமானங்கள் பறந்தமையினால் மக்கள் அச்சமடைந்தனர். கடந்த யுத்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிபீர் விமானங்கள் பறந்தபோது அதன் சத்தத்தை கேட்ட மக்கள் இன்று காலை மீண்டும் இதன் சத்தத்தை கேட்டு பதற்றமடைந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அந்த பகுதியில் கிபீர் விமானங்கள் பறந்ததனால் தேர் உற்சவத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடையே ஒரு பதற்றமான நிலை ஏற்பட்டது. சிலர் பதறியடித்து ஓடினார்கள். இந்த கிபீர் விமானங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசங்களிலேயே இன்று காலை பறந்துள்ளன என மேலும் அறியப்படுகிறது. இது தொடர்பாக மட்டக்களப்பிலுள்ள படை அதிகாரியொருவரை கோவில் நிர்வாகம் தொடர்புகொண்டு வினவியபோது, இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமையினாலேயே இந்த கிபிர் விமானங்கள் மட்டக்களப்பில் பறந்தன. இதையிட்டு எவரும் அச்சமடையத் தேவையில்லை" என்று அப்படையதிகாரி தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவமும் வான்படையினரும் இணைந்து பாரிய ஒத்திகை ஒன்றைப் நடத்தியுள்ளார்கள் என்று மேலும் அறியப்படுகிறது.