வடக்கு மாகாணத்துக்கு சுயாட்சி வழங்குங்கள்: 5 நாடுகள் கோரிக்கை
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மொத்தம் உள்ள 38 இடங்களில் 30 இடங்களைப் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இதனால் ஈழத்தில் தமிழர்களை, தமிழர்களே ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
வடக்கு மாகாண முதல்– அமைச்சராக முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரன் தேர்ந்து எடுக்கப்பட உள்ளார். விரைவில் அவரும், அவரது தலைமையிலான அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர்.
அவர்கள் தமிழர்கள் சுதந்திரமாக வாழ தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெளிநாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த ஈழ தமிழர்களும் வடக்கு பகுதியில் ஏற்படப் போகும் மாற்றங்களை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
இந்த நிலையில் வடக்கு மாகாணத்துக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்– அமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தி வருகிறார். இதே கோரிக்கையை கூறி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு புலம் பெயர்ந்த தமிழர் பேரவையினர் அந்தந்த நாடுகளிடம் மனு கொடுத்து வருகின்றனர்.
இதையடுத்து வடக்கு மாகாணத்துக்கு சுயாட்சி அதிகாரத்தை வழங்குமாறு இலங்கையை 5 நாடுகள் வற்புறுத்தியுள்ளன. இந்த நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் வடக்கு மாகாணத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே வடக்கில் தேர்தல் நடந்தபோது ராணுவத்தினர் தமிழர்களை தாக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டதாக கோபால்சாமி தலைமையில் சென்ற பார்வையாளர் குழு கூறியுள்ளது. ஆனந்தி வீட்டை தாக்கியது ராணுவம்தான் என்று கண்காணிப்புக்குழு தலைவரான இந்தியா முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி கூறினார்.
இதற்கிடையே வடக்கில் மாவீரர்கள் துயில் இல்லங்களை கட்ட வேண்டும் என்று ஈழத்தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இடிக்கப்பட்ட மாவீரர் துயில் இல்லங்களை மீண்டும் கட்ட விடமாட்டோம் என்று சிங்கள அரசு கூறியுள்ளது.
0 Comments