Home » » மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் விவசாயப் பணிப்பாளர் இக்பால் அரச பணியில் ஓய்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் விவசாயப் பணிப்பாளர் இக்பால் அரச பணியில் ஓய்வு

(மட்டக்களப்பு சிஹாறா லத்தீப்)
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மத்திய விவசாயத் திணைக்களத்தின் மாவட்டப் பணிப்பாளராக கடமையாற்றிய அக்கரைப் பற்றுப் பகுதியைச் சேர்த யாசீன்பாவா முகம்மது இக்பால் தனது 28 வருட சேவையின் பின்னர் சுயவிருப்பத்தின் பெயரில் தனத 55வது வயதில் அரச பணியிலிருந்து ஓய்வு நிலைக்குள்ளாகியுள்ளார்.


அக்கரைப்பற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான பணிப்பாளர் இக்பால், யாசீன்பாவா சுகாரா உம்மா தம்பதிகளின் புதல்வாரும், கிழக்கு பல்கலைக் கழகத்தின் விவசாய விஞ்ஞானப் பட்டதாரியும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முதுமாணிப் பட்டதாரியுமாவார்.

1992ல் மகா இலுபள்ளம விவசாய அராய்ச்சி நிறுவகத்தில் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தராக தனது அரச பணியை ஆரம்பித்த இக்பால் 1999 முதல் 2018 வரை பத்தளகொட மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உதவி விவசாய ஆராய்ச்சிப் பணிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இயங்கும் மத்திய விவசாயத் திணைக்களத்தின் மாவட்டப் பணிப்பாளராக பதவியேற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இன்றுவரை இரண்டு வருடங்கள் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் சேவையை பூர்த்தி செய்ததன்பின்ர் சுயவிருப்பத்தின் பெயரில் ஓய்வு நிலைக்கு உள்ளாகியுள்ளார்.

இவரின் ஓய்வை முன்னிட்டு பிரிவுபசார நிகழ்வொன்று இன்று (28) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் சகல அரச உத்தியோகத்தர்களும் என்றோ ஒருநாள் ஓய்வுநிலைக்கு உள்ளாகியாகவேண்டும். அந்தவகையில் பணிப்பாளர் இக்பாலை குறுகிய காலத்திலேயே அறியமுடிந்திருந்தாலும் அவரின் சிறப்பான பண்புகள் வரவேற்கத்தக்கது. அவரின் விசேட பண்பாக அவரது பிரிவிற்கு அனுப்பப்படும் கடிதங்களுக்கு கிரமமாக பதிலளிப்பதில் நேர்த்தியான பண்பினைக் கொண்டிருந்தார். விவசாய ஆராய்ச்சித் துறையில் மிகுந்த புலமைத்துவம் கொண்டிருந்த இவர் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நேர்த்தியான விளக்கம் கொடுப்பதில் முன்னிலை உத்தியோகத்தராக இருந்தவர்.

சொந்தத் தேவையின் நிமித்தம் அரச கடமையைப் பிரிந்து செல்லும் பணிப்பாளர் இக்பால் எதிர்காலத்தில் மகிழ்ச்சிகரமான குடும்பமாகவும், உயர்ந்தநிலையில் வாழ்வதற்கும் இறைவனைப் பிராத்தித்து பிரியாவிடை வழங்கி வழியனுப்பி வைக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசு விவசாயத்துறையினை முன்னேற்றுவதற்கு கூடிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. இதற்கமைய விவசாய நலன்சார்ந்த செயற்பாடுகளில் அரசாங்கம் மிகுந்த கவனஞ்செலுத்திவருகின்றது. இத்திட்டத்தினை அமுல் நடாத்தும் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகிய நீங்கள் உங்கள் பணிகளை எதிர்வருங்காலங்களில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்ராஜா, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், உதவி மாவட்ட செயலாளர். ஏ. நவேஸ்வரன், தேசிய உரச் செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ். சீராஜுன் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகத்தர் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இவரின் சேவையைப் பாராட்டி திணைக்களப் பணியாளர்களால் தங்கப்பதக்கமும் ஞாபகச்சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |