Home » » வெளிவாரி பட்டதாரிகளுக்கான நியமனம் கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

வெளிவாரி பட்டதாரிகளுக்கான நியமனம் கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால் வெளிவாரி பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் கிண்ணியா பீச்சுக்கு முன்னால் இன்று இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல நூற்றுக்கும் அதிகமான வெளிவாரி பட்டதாரிகள் கலந்து கொண்டு தங்களுக்கும் நியமனங்களை வழங்குமாறு கோரி கோசங்களை எழுப்பியிருந்தனர்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம் வழங்குதலில் அரசாங்கம் வெளிவாரி பட்டதாரிகளை புறக்கணித்தால் எதிர்வரும் தேர்தல்களை நாங்கள் புறக்கணிப்போம், அரச நியமனங்களின் போது எங்களையும் உள்வாங்கு, பட்டதாரிகள் நாட்டின் சொத்து, பத்து இலட்சம் வேலை வாய்ப்பு எங்கே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை அவர்கள் ஏந்தியிருந்ததுடன், கோசங்களை எழுப்பியிருந்தனர்.

கிழக்கில் அறுநூறுக்கும் மேற்பட்ட வெளிவாரி பட்டதாரிகள் உள்ளார்கள். எங்களை அரச நியமனத்தில் உள்வாங்க வேண்டும். இல்லாவிட்டால், எங்களது குடும்ப வாக்குகளை பெறுவதற்காக அரசியல்வாதிகள் எங்களுக்கு பின்னால் தேர்தல் காலங்களில் வரவேண்டி ஏற்படும் இதனைக் கொண்டு தனிப்பெரும் சக்தியாக மாறுவோம்.
வெளிவாரி பட்டங்கள் என்பதும் நாட்டின் சொத்தாக விளங்குகிறது. எனவே, தற்போதைய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம் வழங்கலில் எங்களுக்கும் இந்த அரசாங்கம் நியமனங்களை வழங்க வேண்டும் எனவும் கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கிண்ணியா கடற்கரை பூங்காவில் இருந்து கிண்ணியா பிரதேச செயலகம் வரை நடைபவனியாக சென்ற வேலையில்லா வெளிவாரி பட்டதாரிகள், பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் இதன்போது கையளித்துள்ளனர்.





Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |