Home » » அரசியலே வேண்டாம்... ஒதுங்கி விடுவேன்! கூட்டமைப்பின் எம்.பி பகிரங்க அறிவிப்பு

அரசியலே வேண்டாம்... ஒதுங்கி விடுவேன்! கூட்டமைப்பின் எம்.பி பகிரங்க அறிவிப்பு

எனக்கு பணம் வழங்கி அரச தொழில் பெற்றேன் என்று யாராவது கூறினால் நான் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி விடுவேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீநேசன் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொண்டையன்கேணி பிள்ளையார் ஆலயத்தின் மடப்பள்ளியினை நேற்று திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
கம்பெரலிய திட்டத்தின் மூலம் முதலாவதாக எங்களுக்கு நூறு மில்லியன் வழங்கப்பட்டது. இதனை நானும் சக நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் பயன்படுத்தினோம். நூறு மில்லியனில் ஒரு சதமும் செலவழிக்காமல் திறைசேரிக்கு அனுப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் உள்ளார்.
அவர் வெளிநாட்டில் சுற்றுலா செய்து திரிந்த போது நூறு மில்லியனும் செலவு செய்யாமல் வீணாக திரும்பி திறைசேரிக்கு சென்றுவிட்டது.

இந்த நிதி மக்களுக்கு கிடைக்கவில்லை. தனிப்பட்ட சுயநல நிதிகளை பெறுகின்றார்கள். ஆனால் பொதுநல நிதிகளை பெற்றுக் கொள்வதில்லை.
அதேபோன்று கட்சி தாவியவர்களுக்கு கம்பெரலிய நிதி வழங்கப்படாது என்று தெரியும். மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மூன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்தார்கள்.
ஆனால் தெரிவு செய்யப்பட்ட மூன்றாவது நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய நிதி கிடைக்க வேண்டும் என்று போராடி, வாதாடி அதிகாரிகளிடம் நியாயத்தினை சொன்னேன்.
அதாவது மட்டக்களப்பு மாவட்டத்தில் 74 வீதமாகவுள்ள தமிழ் மக்களுக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினரின் நிதியை கொண்டு அபிவிருத்தி செய்ய முடியாது.
மூன்றாவது நாடாளுமன்ற உறுப்பினர் மக்களின் கருத்துக்களை அறியாமல் சென்று விட்டார். மூன்றாவது நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய கம்பெரலிய பணத்தினை தர வேண்டுமென நான் வாதாடி இருநூறு மில்லியன்களை பெற்றேன்.

இன்னும் நூறு மில்லியன் உள்ளது அதை எங்களது சகோதர நாடாளுமன்ற உறுப்பினர் பெற்றுக் கொள்ளலாம்.
எவருடைய பணத்தினையும் நான் பெறவில்லை. மக்களுக்கு சேர வேண்டிய பணத்தினை அதிகாரிகளிடம் வாதாடி உண்மை நிலைமையை கூறி அப்பணத்தினை பெற்றுக் கொண்டேன். கையில் பணத்தினை பெறுவதில்லை. மாவட்ட செயலகம் ஊடாக பிரதேச செயலகங்களுக்கு திட்டங்களுக்கு வழங்கப்படுகின்றது.
முகநூலில் போடப்பட்டிருந்தது. நான் ரணிலிடம் இருந்து பணத்தினை பெற்றேன். முடியுமானால் மற்றவரும் பணத்தினை பெறட்டும். இது இலஞ்சம் பெறுவது போன்று. முட்டாள் தனமாக நயவஞ்சகமான கருத்துக்களை எழுதுவதற்கு சிலர் இருக்கின்றார்கள். நாங்கள் கை நீட்டி ஒரு காசுகூட சுய இலாபத்திற்காக பெறுவதில்லை.
நாங்கள் மோசடி செய்வதற்கு, உழைப்பதற்கு, பாரிய கட்டடங்களை அமைப்பதற்கு அரசியல் செய்ய வரவில்லை. தொழிலை வழங்கி விட்டு பணத்தினை கரப்பதற்கும் வரவில்லை.

எனக்கு பணம் வழங்கி அரச தொழில் பெற்றேன் என்று யாராவது கூறினால் நான் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி விடுவேன். இதனை எல்லோரும் செய்வார்கள் என்றால். இதை புனிதமான, மனிதமான, புண்ணியமான அரசியலாக பார்ப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.







Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |