Home » » இலங்கை மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்து!

இலங்கை மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்து!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்த தாழமுக்கமானது இன்று அதிகாலை இரண்டு மணிக்கு பொத்துவிலுக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 800 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய வானிலை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிகையில் மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
இந்த தாழமுக்கமானது 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாகவும் தொடர்ந்து ஒரு சூறாவளியாகவும் விருத்தியடைய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இத்தொகுதி வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்குக்கரையை அண்டியதாகவும், விலகியும் நகரக் கூடுவதுடன் 2019 ஏப்ரல் 30ஆம் திகதி மாலையளவில் (இந்தியா) வட தமிழ்நாட்டு கரையை அடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இந்த நிலையில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பி.ப இரண்டு மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதேவேளை புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் கொழும்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு முதல் தென்கிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும்.
தங்காலையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோமீற்றர் வரை காணப்படும்.
இலங்கைக்கு தென்கிழக்காக உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசும் சாத்தியம் உள்ளது. அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும்.
இலங்கைக்கு தென்கிழக்காக உள்ள ஆழம் கூடிய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
பொது மக்களும், கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் எதிர்காலத்தில் தொடர்ந்து வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையின் பல மாவட்டங்களில் அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதால் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |