Home » » டெல்லியின் முழு ஆசீர்வாதத்துடனேயே இலங்கையில் அரசியல் மாற்றம் - வைகோ ஆவேசம்.!

டெல்லியின் முழு ஆசீர்வாதத்துடனேயே இலங்கையில் அரசியல் மாற்றம் - வைகோ ஆவேசம்.!

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடனேயே இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இலங்கையின் பிரதமராக இருந்து வந்த ரணில் அப்பதவியிலிருந்து அதிபர் சிறிசேனாவால் நீக்கப்பட்டு, புதிய அதிபராக போர்க்குற்றங்களுக்கு ஆளான ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் உலக நாடுகளின் பார்வையை இலங்கையை நோக்கி திருப்பியுள்ள நிலையில், இந்திய, சீன அரசுகளின் முழுமையான ஆதரவுடனேயே இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் வைகோ. இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, " மாலத் தீவு தேர்தலில் நடைபெற்ற அதிகார மாற்றத்தால் ஆத்திரமடைந்த சீனா, இலங்கையில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக்கொள்வதற்காக ஏற்கனவே அம்மன்தோட்டா துறைமுகத்தைப் பெற்றதோடு, மீண்டும் ராஜபக்சே கைகளில் அதிகாரம் வரவேண்டும் என்று திட்டமிட்டுக் காய் நகர்த்துகிறது.
தமிழ் இனக்கொலையாளி ராஜபக்சே இந்தியாவுக்கு வந்து, பிரதமர் மோடியைச் சந்தித்ததும், மூன்று நாட்கள் டெல்லியில் முகாமிட்டதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது" என தெரிவித்துள்ளார்.
மேலும், " இலங்கை அரசியல் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 19வது திருத்தத்தின்படி, ராஜபக்சே நியமனம் செல்லாது என்றும், தானே பிரதமர் என்றும் ரணில் விக்கிரமசிங்கே கூறி இருக்கிறார். எது எப்படி இருப்பினும் சிங்களர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் தமிழ் இன அழிப்பையே நோக்கமாகக் கொண்டவர்கள் என்பதும், தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதும் உண்மையாகும்.
லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் சிங்கள அரசால் கொல்லப்பட்டதையும், அதனைத் தடுப்பதற்காக முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழர்கள் தங்கள் உயிர்களை நெருப்புக்குத் தாரைவார்த்துப் பலியாகி தியாகம் செய்து மடிந்ததையும் மனதில் கொண்டு தமிழர்கள் செயலாற்ற வேண்டும்.
இலங்கை அரசாங்கத்தினுடைய மோசடியையும், சதி நாடகத்தையும் உலக நாடுகள் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நரேந்திர மோடி அரசு தொடக்கத்திலிருந்தே மனித உரிமைக் கவுன்சிலிலும், ஈழத்தமிழர்கள் குறித்த அனைத்துப் பிரச்சினைகளிலும் சிங்கள அரசுக்கு ஆதரவாகவே நடந்து வருகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |