எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன், நீண்ட கால யுத்தத்தின் காரணமாக பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இலங்கை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளமையினையும்,
இந்நிலையினை சீர்செய்வதற்கு சர்வதேசத்தின் உதவி தேவை எனவும் வலியுறுத்தினார். |
யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கிலுள்ள மக்களின் பிரச்சினைகளை இந்தோனேசிய ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்த இரா. சம்பந்தன் வேலை வாய்ப்பினையும் அதனால் இளைஞர்கள் எதிர்நோக்கும் விளைவுகளும் முறையான பொருளாதார முதலீடுகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்தோனேசியா முதலீடுகள் செய்வதனை உறுதிப்படுத்துமாறும் இந்தோனேசிய ஜனாதிபதியை இரா. சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.
இலங்கை மக்களின் விசேடமாக யுத்தத்தினால் அதிகம் பாதிப்பிற்குள்ளான வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் வகையிலான முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதன் போது கருத்து தெரிவித்த இந்தோனேசிய ஜனாதிபதி, தன்னோடு இலங்கை வந்துள்ள குழுவில் இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வமாயுள்ள முதலீட்டாளர்களும் அடங்குவதாகவும் இலங்கை இந்தோனேசிய உறவானது ஆறு தசாப்தங்களுக்கும் மேலானது என்றும் இந்தோனேசியா தொடர்ந்தும் இலங்கையுடன் பொருளாதார இணைப்பினை பேணுவதில் ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகள் தொடர்பில் ஜனாதிபதியை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன் ஒருமித்த, பிரிக்கப்படாத, பிரிவுபடாத நாட்டிற்குள் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் நீண்டகால யுத்தத்திற்கு பின்னர் தமது இந்த முயற்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் இந்த சந்தர்ப்பத்தினை தவற விடாது தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை எட்டும் வகையில் இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமரும் புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்படுவதின் முக்கியத்துவத்தையும் புதிய அரசியலமைபொன்றிக்கான தேவையானது நாட்டு மக்கள் அனைவருக்கும் அவசியமானது என்பதனையும் இந்நாட்டு மக்களுக்கு எடுத்துக்கூறியவர்களின் ஒத்துழைப்பை பெறவேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார்.
தேசிய பிரச்சினையின் காரணமாக ஐம்பது வீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர் எனவும் இவர்களில் பெரும்பாலானவர்கள் கல்விமான்கள் எனவும் தெரிவித்ததோடு ஒரு புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணுவதன் மூலம் இத்தகைய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இடம் பெறாமல் இருப்பதனை உறுதிசெய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த இந்தோனேசிய ஜனாதிபதி இலங்கையின் நாட்டை கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முன்னெடுப்புகளுக்கும் மற்றும் வளங்களை கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கும் இந்தோனேசியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என தெரிவித்தார்.
![]() |



0 Comments