நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் நாளை (05) முதல் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அந்தமான் தீவின் தென்பகுதியில் நிலைகொண்டுள்ள தாழமுக்கமானது மேலும் வலுப்பெறுவதால் மழை பெய்யக்கூடிய சாத்தியமுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
75 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வானிலை அதிகாரி கணபதிப்பிள்ளை சூரியகுமாரன் தெரிவித்தார்.
நாளை முதல் நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் என்பதால், மீனவர்களும் கடற்சார் தொழிலாளர்களும் அவதானமாக செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, பதுளை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பலாங்கொடையில் மண்சரிவு அபாயமிக்க பகுதியில் வசிக்கும் 12 குடும்பங்களுக்கு அங்கிருந்து வௌியேறுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்தது.
மழை காரணமாக அதிகரித்திருந்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
களு, நில்வளா, கிங் கங்கைகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.
எவ்வாறாயினும், பலத்த மழை மற்றும் கடும் காற்றுடன் கூடிய சீரற்ற வானிலையால் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் மூவாயிரத்திற்கும் அதிகமானார் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.
சீரற்ற வானிலையால் 15 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments