கிண்ணியாவில் தீவிரமாக பரவும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட அறிக்கையொன்றை சுகாதார அமைச்சர் மூலமாக, அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பொதுமக்களை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உiயாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,
திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பாக கிண்ணியா பிரதேசத்தில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக சுகாதார அமைச்சு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, முப்படை அதிகாரிகள், உள்ளுர் மருத்துவ சேவை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினோம்.
டெங்கு நோய் தொடர்பாக மக்கள் விழிப்புணர்வு செயற்பாடுகளை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். அத்துடன் தற்போது வீடுகளை சுத்தம் செய்துவரும் படையினருக்கு மேலதிகமாக 800 பேரை அப்பணியில் ஈடுபடுத்துவதற்கு முப்படையினரும், பொலிஸ் அதிகாரிகளும் தீர்மானித்துள்ளனர்.
அத்துடன் சிவில் சமூக அமைப்பு, விளையாட்டுக் கழகங்கள் மற்றும் தொண்டர்களை இந்த பணிகளில் ஈடுபடுத்துவதற்கும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு மேலதிகமாக தேவைப்படும் ஒதுக்கீடுகள், வாகனங்கள், உபகரணங்கள் உள்ளிட்ட ஏனைய தேவைகளை நிறைவேற்றிக்கொடுப்பதற்கான பொறுப்புகளை நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.
இங்கு நடைபெற்ற கலந்துரையாடலின் சராம்சங்களை சுகாதார அமைச்சர் மூலம் அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கும் நாங்கள் தீர்மானித்துள்ளோம். அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் பூரண விளக்கத்தை அளிக்குமாறு சுகாதார அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கவுள்ளேன்.
கிண்ணியா தள வைத்தியசாலை மற்றும் அதனை அண்டியுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள், தேவைப்பாடுகள் மற்றும் ஆளனி பற்றாக்குறை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன. அவற்றுக்கான தீர்வுகளை மிக விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளையும் நாங்கள் செய்திருக்கிறோம்.
கிண்ணியாவில் முழுமையான வடிகாலமைப்பு மற்றும் கழிவுநீர் தொகுதியை அமைத்து முறையான கழிவகற்றல் நடவடிக்களை மேற்கொள்வதற்கான பணிப்புகரைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விடுத்துள்ளேன்.
இந்த டெங்கு காலத்தில் பிள்ளைகள் வீடுகளில் இருப்பதை பாடசாலைகளிலேயே பாதுகாப்பாக இருப்பதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு அதிகாரி டொக்டர் சரத் அமுனுகம எம்மிடம் தெரிவித்தார். அதற்கமைய மூடப்பட்ட சகல பாடசாலைகளையும் இன்று திங்கட்கிழமை திறப்பதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம் என்றார்.
கிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமட், சுகாதாரத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசீம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹ{னைஸ் பாறுக், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், ஜே.எம். லாஹிர், முன்னாள் தவிசாளர் எச்.எம்.எம். பாயிஸ், முப்படை அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.









0 Comments