ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை விசாரணை செய்வதற்கான அனுமதியை இன்டர்போல் பொலிஸார் எப். சி. ஐ. டி. யினருக்கு வழங்கியுள்ளனர். இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் எப். சி. ஐ. டிக்கு உத்தியோகபூர்வமாக நேற்று இன்டர்போல் அறிவித்துள்ளது.
இந்த அனுமதி தொடர்பில் ஆராயவுள்ளதாக கோட்டை நீதவான் தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு இலங்கை விமானப் படைக்காக கொள்வனவு செய்த மிக் விமானம் தொடர்பிலான நிதி முறைகேடுகள் குறித்தே விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, உதயங்க வீரதுங்க தற்போது உக்ரைன் நாட்டில் வசித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் தலபத்பிட்டியவிலுள்ள உதயங்க வீரதுங்கவின் வீட்டிற்கு சென்றபோது அவர் அங்கு இருக்கவில்லையென்றும் அவ்வீட்டில் வசித்து வரும் அவரது சகோதரியிடம் அவருக்கான செய்தியை தெரிவித்து வந்ததாகவும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நேற்று மஜிஸ்ட்ரேட்டிடம் தெரிவித்தது.
மேலும் உதயங்க தற்போது உக்ரைனில் வசித்து வருவதாக கூறப்படுவதால் அங்கு அவர் வசிக்கலாம் என நம்பப்படும் முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்ததாகவும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்தது.
இதேவேளை மிக்-27 விமானம் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை விமானப் படை அசல் ஆவணங்களை இன்னமும் கையளிக்கவில்லை என்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்தது.
இலங்கை விமானப் படையின் சட்டப் பணிப்பாளர் மிக் விமானக் கொள்வனவுடன் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்கள் காணாமல் போயிருப்பதாக பொலிசாரிடம் கூறினார். இதன் காரணமாக இலங்கை விமானப் படையின் சட்டப் பணிப்பாளரை நீதிமன்றத்தில் ஆஜர்செய்வதற்கும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நேற்று மஜிஸ்ட்ரேட்டிடம் அனுமதி கோரியது.
எனினும் மஜிஸ்ட்ரேட் இது குறித்து அடுத்த அமர்வின்போது கவனத்திற்கொள்வதாக கூறினார்.
0 Comments