புங்குடுதீவு மாணவியின் கொலைக்கு ஒரு தலைக்காதலே காரணம் என குற்றப்புலனாய்வு துறையினர் நீதிமன்றில் தெரிவித்து உள்ளனர். புங்குடுதீவு கொலை வழக்கு வெள்ளிக்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது குற்ற புலனாய்வு துறையினரால் மன்றில் விசாரணை வாசிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது, மாணவியை புங்குடுதீவை சேர்ந்த சிவதேவன் துஷாந்த் எனும் சந்தேகநபர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அந்தக் காதலுக்கு மாணவி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். அதனால் தனது நண்பரான தில்லைநாதன் சந்திரஹாசன் என்பவருடன் கூட்டு சேர்ந்து மாணவியைக் கடத்த திட்டமிட்டு உள்ளார். அதற்கு அப்போது சுவிஸில் இருந்து வந்து சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவர் திட்டம் தீட்டிக் கொடுத்துள்ளார். இவர்கள் மூவரின் திட்டத்திற்கும் மேலும் இருவரை கூட்டு சேர்த்து உள்ளனர். அவர்கள் இருவருக்கும் களவு வழக்கு ஒன்றில் மாணவியின் தாயார் சாட்சியம் அளித்து இருந்தமையால், அவர்கள் இருவருக்கும் மாணவி குடும்பத்திற்கும் இருந்த பகைமையை பயன்படுத்தி அவர்கள் இருவரையும் தமது திட்டத்திற்கு பயன்படுத்தி உள்ளனர். சுவிஸ் குமார் தலைமையில் தீட்டப்பட்ட திட்டத்தின் பிரகாரம், மாணவியின் தாயால் பாதிக்கப்பட்ட இருவராலும் மாணவி பாடசாலைக்கு செல்லும் வழியில் இடைமறித்து கடத்தி சென்று துசாந்த் மற்றும் சந்திரஹாசன் ஆகியோரிடம் ஒப்படைத்து உள்ளனர். அவர்களே மனைவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்துள்ளனர். இன்னமொரு நபர் பதினோராவது சந்தேகநபராக நேற்று கைது. இதேவேளை நேற்றையதினம் இக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் மேலும் ஒரு நபர் கைது செய்யபட்டு உள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சுவிஸ் நாட்டில் இருந்து வந்திருந்த சுவிஸ் குமார் என்பவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மே மாதம் 10ம் திகதி (கொலை நடைபெறுவதற்கு மூன்று தினங்களுக்கு முன்பு ) யாழில் கஞ்சா கொண்டு சென்று கொடுத்தேன். அன்றில் இருந்து சம்பவம் நடைபெறும் நாள் வரையிலான மூன்று தினங்களும் சுவிஸ் குமாரினால் மது விருந்து அளிக்கப்பட்டு உள்ளது. சம்பவ தினத்திற்கு முதல் நாளும் மது விருந்து அளிக்கப்பட்டு அவர்கள் நிறை போதையில் இருந்து உள்ளார்கள். சம்பவ தினத்தன்று காலை துஷாந் மற்றும் சந்திரஹாசன் ஆகிய இருவரும் கஞ்சாவை பீடிக்குள் சுற்றி அடித்து உள்ளார்கள். கஞ்சா போதை மற்றும் மது போதை ஆகியவற்றுடனேயே மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளனர். இவற்றை நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட 11ஆவது சந்தேக நபர் நேரில் பார்த்து உள்ளார். அதனை அவர் விசாரணையின் போது தெரிவித்து உள்ளார். தடயங்களை அழிக்க கொழும்பில் இருந்து வந்தவர்கள். வன்புணர்வு செய்து மாணவியை கொலை செய்த பின்னர் கொலையை கடற்படையினரே செய்தார்கள் என திசை திருப்பும் நோக்குடன் கொலை கோரமான முறையில் நடைபெற்றது போன்றதான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதன் பின்னர் கொழும்பில் இருந்த தமது நண்பர்களான 4ம் , 7ம் ,8ம் சந்தேகநபர்களுக்கு அறிவித்து உள்ளனர். அவர்கள் கொழும்பில் இருந்து வந்து கொலையாளிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு தடயங்களை அழித்து கொலையை மறைக்க முயன்றுள்ளனர். 12 ஆவதாகவும் ஒருவர் சம்பந்தம். மாணவியின் கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு நபா் விசாரணைகளின் மூலம் இனம் காணப்பட்டு உள்ளார். குறித்த 12 ஆவது சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வு துறையினர் முன்னெடுத்து வருகின்றார்கள். கொலை தொடர்பான தகவல் தெரிந்தால் அறிவிக்கவும். மாணவியின் கொலை தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் 0773291500 , 0778503002 ஆகிய இரு தொலைபேசி எண்களுக்கும் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு குற்ற புலனாய்வு பிரிவின் கூட்டுக்கொள்கை பிரிவு பிரதம அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா கோரியுள்ளார். அறிக்கைகள் நீதிமன்றில் தாக்கல் செய்யபப்டவில்லை. மாணவியின் கொலை தொடர்பான டி என் ஏ அறிக்கை, இரத்த கறையுடன் மீட்கப்பட்ட ஆடையின் அறிக்கை உட்பட 12 அறிக்கைகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவேண்டிய நிலையில் உள்ளன. குறித்த அறிக்கைகளை நீதிமன்றில் சமர்பிக்க வேண்டும் அல்லது இது வரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த 19ம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நீதவான் குற்ற புலனாய்வு துறையினருக்கு கடும் தொனியில் உத்தரவு இட்டு இருந்தார். அதனடிப்படையில் இன்றைய தினம் அறிக்கைகள் நீதிமன்றில் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அறிக்கைகள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. இதுவரை நடைபெற்ற விசாரணை தொடர்பிலான அறிக்கையே நீதிமன்றில் சமர்பிக்க ப்பட்டது. சந்தேகநபர்களை பிணையில் விட கோரிக்கை. இன்றைய வழக்கு விசாரணையில் 2ம் , 3ம் , 5ம் , 6ம் , 9ம் , 11ம் சந்தேக நபர்களே கொலையுடன் நேரடியாக சம்பந்த பட்டு உள்ளார்கள் என நீதிமன்றில் குற்றபுலனாய்வு துறையினர் தெரிவித்ததை அடுத்து, சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி 1ம் , 4ம், 7ம், 8ம் , 10ம் , சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரினார். அதற்கு மாணவி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளான சுகாஸ் மற்றும் ரஞ்ஜித்குமார் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. இதுவரையில் டி.என்.ஏ அறிக்கை உட்பட அறிக்கைகள் எதுவும் மன்றில் சமர்பிக்கப்படவில்லை. எனவே சந்தேகநபர்களை விடுதலை செய்ய அனுமதிக்கக்கூடாது என சட்டத்தரணி சுகாஸ் நீதவானிடம் கோரினார். வழக்கு 18ம் திகதிக்கு ஒத்திவைப்பு. இந்த கொலை எவராலும் சகித்துக் கொள்ள முடியாத ஏற்றுக்கொள்ள முடியாத துன்பகரமான செயல். இதற்கு கடவுளின் கிருபையுடன் நீதி கிடைக்கும். அதுவரைக்கும் பொறுமையாக இருங்கள் என ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் தெரிவித்தார். அத்துடன் வழக்கினை எதிர்வரும் 18ம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன் அதுவரையில் 10 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.
0 Comments