பெற்றோர்கள் வெளிநாடு செல்வதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பாடசாலை செல்லும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் சித்திபெற்ற கதிரவெளி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வித்தியாலய மண்ணடபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
அவர் தொடரந்து உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேசமானது யத்தத்தினால் பல இழப்புக்களைச் சந்தித்திருந்தது. இந்த வகையில் கதிரவெளி கனிஷ்ட வித்தியாலயத்தில் இரண்டு மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.
அவர்களை கற்பித்த ஆசிரியர்கள் மிகவும் சிரமத்தின் மத்தியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு அதில் வெற்றி கண்டுள்ளார்கள்.
கிழக்கு மாகாணத்திலுள்ள பல பெற்றோர்கள் வெளிநாடுகளில் தொழிலுக்கு செல்வதன் காரணமாக பாடசாலை செல்லும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளது.
பல பெற்றோர்கள் வெளிநாடுகளில் இருப்பதன் காரணமாக மாணவர்களில் பலர் பாடசாலைக்குச் செல்லாது இடைவிலகுகின்றனர். மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கா விட்டால் ஆசிரியர்கள் அதற்கான காரணங்களை அறிந்து மாணவர்களின் வரவு வீதத்தை அதிகரிக்க வேண்டும்.
கடந்த கால யுத்தத்தினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள எமது மக்கள் வறுமை காரணமாக தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாது இளம் வயதில் தொழிலுக்கு அனுப்புகின்றனர்.
இதனால் அவர்களது கல்வி நடவடிக்கைகள் இடை நடுவிலே பாதிக்கப்டுகிறது. வறுமையை காரணம் காட்டி மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை நிறுத்த கூடாது.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு நாங்கள் இயன்ற உதவிகளை வழங்கி வருகிறோம்.
ஒரு காலத்தில் கல்வியில் முதன்மை வகித்த எமது தமிழினம் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது பெறுபேறுகளின் அடிப்படையில் சற்று பின் நோக்கி சென்றுள்ளது.
இந்த நிலை மாற வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை அவதானித்து அதற்கேற்ற வகையில் தமது கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்வானது வித்தியாலய அதிபர் த.வை.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.பரமேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





0 Comments