இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரியொருவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வசமாக வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவமொன்று இந்தியாவில் நடைபெற்றுள்ளது.
இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவைச் சென்றடைந்ததும் புதுடில்லி தாஜ் பெலஸ் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது பிரதமர் தங்கியிருந்த அறைக்கு இலங்கை வெளிநாட்டமைச்சின் அதிகாரியொருவர் கோப்பு(பைல்) ஒன்றையும் தூக்கிக்கொண்டு வருகை தந்திருந்தார். பிடிவாதமாக பிரதமரை நேரில் சந்தித்த அந்த அதிகாரி தன் கையில் இருந்த பைலை பிரதமரிடம் நீட்டியுள்ளார்.
பைலுக்குள் என்ன இருக்கிறது? இது பிரதமர் ரணிலின் கேள்வி
சேர், நீங்கள் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி முகர்ஜியைச் சந்தித்த பின் ஊடக சந்திப்பில் உரையாற்ற வேண்டிய உரை இதில் உள்ளது! இது வெளிநாட்டமைச்சு அதிகாரியின் பதில்.
இதனைக்கேட்டதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முகம் கோபத்தில் சிவந்தது.
நான் ஆற்ற வேண்டிய உரையை எனக்கு யாரும் எழுதித்தரவேண்டியதில்லை! பிரதமர் கடுமையான தொனியில் பதிலளித்துள்ளார்.
எனினும் குறித்த அதிகாரி அவ்விடத்தில் இருந்து அகலாமல் அந்த உரையின் முக்கியத்துவம் குறித்து பிரதமருடன் வாதிட முற்பட்டுள்ளார். இதனையடுத்து கடும் கோபம் கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்த அதிகாரி கண் முன்னாலேயே அவர் தயாரித்திருந்த உரையை குப்பைக் கூடைக்குள் வீசியெறிந்துள்ளார்.
அத்துடன் இதுபற்றி அதிகாரிகள் மத்தியில் பிரஸ்தாபித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னைய அரசாங்க காலத்தில் அரச தலைவர்களை ஆட்டுவித்தது போன்று, எந்தவொரு அதிகாரியும் பிரதமரை ஆட்டுவிக்க முயற்சிக்க வேண்டாம் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
அதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச் செயலாளர் ராகுல்காந்தி ஆகியோரைச் சந்தித்தபோது வெளிநாட்டமைச்சு அதிகாரிகள் யாரும் குறுக்கீடு செய்ய முயற்சிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.
0 comments: