மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி கிராமம் சிங்காரத்தோப்பில் வசித்து வந்த தனது கணவனை செவ்வாய்க்கிழமை இரவு முதல் காணவில்லை என மனைவி வைரமுத்து தங்கநேசம் (வயது44) ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் நேற்று புதன்கிழமை (22/07/2015) முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது,
ஏறாவூரிலுள்ள ஹார்டவெயார் கடைக்கு செவ்வாய்க்கிழமை வழமை போன்று வேலைக்குச் சென்ற தனது கணவன், புதன்கிழமை காலை வரை வீடு திரும்பவில்லை. விசாரித்தறிந்தபோது ஏறாவூரில் வைத்து செவ்வாய்க்கிழமை ஒருவர் வேனில் கடத்திச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் 2004 ஆம் ஆண்டு தன்னைத் திருமணம் செய்து கொண்டு குடும்பமாக வாழ்ந்து வந்ததாகவும் தனது முந்தைய திருமணத்தில் 3 பிள்ளைகள் உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், விசாரணையின்போது முறைப்பாட்டாளரான பெண் குறித்த நபரின் சட்டப்படியான மனைவி இல்லை என்பது தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, செவ்வாய்க்கிழமை இரவு ஏறாவூர் கடைத்தெருவில் வைத்து ஒருவர் கடத்தப்பட்டதாக வெளியான செய்தியால் ஏறாவூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது


0 Comments