எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவது குறித்த மலையக மக்கள் முன்னணியின் தலைவர்களின் கூட்டம் ஒன்று, இன்று இடம்பெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் ஹட்டனில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த செயற்குழு கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது வே.இராதாகிருஷ்ணன் கருத்து தெரிவிக்கையில்....
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மலையக மக்களுக்கு தனி வீடுகள் அமைக்க வேண்டும் என நாங்கள் கேட்டபோது, மலையக மக்களுக்கு மாடி வீடு தான் அமைக்க ஏற்பாடு செய்ய முடியும், தனித் தனி காணிகள் கொடுத்து வீடுகள் அமைக்க முடியாது என அவர் திட்டவட்டமாக கூறினார்.
இதனையடுத்து நாங்கள் எதிரணிக்கு சென்று மலையக மக்களுக்கு தனி தனி வீடுகள் தருவதாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு ஆதரவளிப்பதை பற்றி தீர்மானம் எடுக்க முடியும் என மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்தபோது, அதற்கு அவர் மலையக மக்களுக்கு தனி தனி வீடுகள் அமைப்பதற்கு நான் உறுதியளிக்கின்றேன், அதுமட்டுமல்லாமல் மலையகத்தில் தேசிய பாடசாலை அமைத்து மலையக பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை உறுதிசெய்யவுள்ளதாகவும், இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதாகவும் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து தருவதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்தே அவருக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்க தீர்மானம் எடுத்தோம். நாங்கள் மட்டுமில்லை சிங்கள, முஸ்லிம் மக்கள் ஆகியோரும் எதிர்ப்பார்ப்பது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வேண்டுமென்பதே.
நாங்கள் எடுத்த இந்த தீர்மானத்திற்கு எதிராக சில பேர் வெளியேறி செல்லலாம் அது அவர்களுடைய தனிப்பட்ட முடிவாகும். மலையக மக்கள் முன்னணி கட்சிக்கு ஒரு முடிவு இருக்கின்றது. அந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது.
அந்த முடிவு மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பது என்ற முடிவே ஆகும்.
எனவே மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று முன் தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தினி சந்திரசேகரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்கப் போவதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments