எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கடுமையாக பாதித்துள்ளதாகவும், இதனால் கடந்த இரண்டு நாட்களாக அவர் நள்ளிரவு தாண்டிய நேரத்திலும் தூக்கமின்றி அவதிப்பட்டு வருவதாகவும் அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே நேற்று நள்ளிரவு தாண்டிய பின்னரும், ஜனாதிபதி தனது வாசஸ்தலமான ஜனாதிபதி மாளிகைக்குச் செல்லாமல் அலரிமாளிகை அலுவலகத்திலேயே தங்கியுள்ளார்.
|
அத்துடன் எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்களான ஜோன் அமரதுங்க, சஜித் பிரேமதாச, சந்திராணி பண்டார, ரவி கருணாநாயக்க, புத்திக பதிரண, திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருடன் மாறிமாறி ஜனாதிபதி தொலைபேசித் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார். இந்தத் தொலைபேசி அழைப்புகளின் பின்னர் ஜனாதிபதியின் முகத்தில் சற்று நிம்மதியான உணர்வு தோன்றியுள்ளதாகவும், அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் ஏதோ இரகசியமாகப் பேசிக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இன்று அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவினரில் இருந்து புதிதாக பதினைந்து பேர் மற்றும் மூன்று வாகனங்களை அலரிமாளிகைக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னாண்டோவுக்கும் வலை வீசியுள்ளார். அமைச்சர் பதவி ஆசையைக் காட்டி ஹிருணிக்காவை சமாதானப்படுத்தியுள்ள அவர் மூலமே ஹரினுக்காக வலை வீசியுள்ளார். இது குறித்தும் நேற்று ஹிருணிக்காவுடன் ஜனாதிபதி தொலைபேசி அழைப்பில் உரையாடியுள்ளார்.ஹரின் அவ்வாறு கட்சி தாவ சம்மதிக்கும் பட்சத்தில் சஷீந்திரவை விலக்கி ஹரினுக்கு முதலமைச்சர் பதவி வழங்கவும் ஜனாதிபதி சம்மதம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் சஷீந்திரவை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வருவது ஜனாதிபதியின் திட்டமாக உள்ளது.
இதற்கிடையே, ஆளுங்கட்சியின் செல்வாக்குமிக்க அமைச்சர்கள் ஆறு பேர் இந்த வாரத்திற்குள் கட்சி தாவும் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இது தொடர்பான பேச்சுவார்த்தை கொழும்பின் முக்கிய ஹோட்டல் ஒன்றில் இரகசியமான முறையில் நள்ளிரவுக்குப் பின்னரும் நடைபெற்றுள்ளது. இதன்போது கட்சி தாவும் அமைச்சர்களுக்கெதிரான ஆளுந்தரப்பின் அச்சுறுத்தல்கள் குறித்தும், எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தை வீழ்த்தும் மரண அடி தொடர்பாகவும் இங்கு சுருக்கமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் அரச தரப்பின் முக்கியஸ்தர்கள் எட்டுப் பேர் கலந்து கொண்டுள்ளனர். அரசாங்கத்தின் தரப்பில் கலந்து கொண்ட எட்டு அமைச்சர்களில் இருவருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் கொண்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதன் காரணமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை அவர்கள் கட்சி தாவும் தீர்மானத்தை ஒத்திவைத்துள்ளனர். எனினும் ஏனைய ஆறு பேரும் இவ்வார இறுதிக்குள் கட்சி தாவத் தீர்மானித்துள்ளனர். இதற்கான உடன்பாடு ஞாயிறு நள்ளிரவு பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
|
0 Comments