நாட்டின் ஜனநாயகத்தையும் உரிமைகளையும் வென்றெடுக்கும் எமது போராட்டத்திற்கான சிறந்த வீரனாக மைத்திரிபால கிடைத்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்கி அதிகாரத்தினை பகிரும் இவர்களின் முயற்சிக்கு எனது முழு ஆதரவினையும் வழங்கத் தயார் என குறிப்பிட்ட கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவாவே சோபித தேரர், இந்த வெற்றி தனி ஒருவருக்கு கிடைத்த வெற்றியல்ல. முழு சமூகத்திற்குமான வெற்றியாகவே கருத வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் நேற்று கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரை சந்திக்க சென்றிருந்தனர். சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்
நாட்டில் சுயாதீன சேவைகளையும் ஜனநாயகத்தையும் மக்கள் ஆட்சியினையும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்திலும் அதற்கான தேவையினை உணர்ந்துமே சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் ஊடாக பொது எதிரணியினை உருவாக்கும் முயற்சியினை மேற்கொண்டிருந்தேன்.
எமது பல நாள் முயற்சியில் இன்று அதற்கான தலைவர் கிடைத்துள்ளார். மக்களின் உரிமைகளுக்காகவும் நாட்டின் பாதுகாப்பிற்காகவும் தனது பதவிகளையும் சலுகைகளையும் துறந்து இந்த நாட்டிற்காக மாபெரும் அர்ப்பணிப்பினை மைத்திரிபால சிறிசேன செய்துள்ளார்.
அதற்கு நாம் அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டும். அதேபோல் இந்த சேவைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது ஒத்துழைப்பையும் முழுப் பலத்தினையும் வழங்க வேண்டும்.
மேலும் நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை வெற்றி கொள்வதற்குமான தலைவர் கிடைத்து விட்டார்.
எனவே இவரின் வெற்றிக்காக எனது முழுமையான ஆதரவினை வழங்குவதுடன் சமூக நீதிக்கான இயக்கத்தினை பயன்படுத்தி மக்கள் அணியினை ஒன்று திரட்டுவேன். அதேபோல் இதில் கிடைக்கும் வெற்றி தனி ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும் வெற்றியல்ல. இது முழு நாட்டிற்கும் முழு சமூகத்திற்கும் கிடைக்கும் வெற்றி. இதனை சரியாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
0 Comments