மட்டக்களப்பில் 18 வயதுக்கு கீழான பெண்கள் கருத்தரிக்கும் வீதம் அதிகரிப்பு
இலங்கையில் 18 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளைகள் கர்ப்பம் தரிக்கும் வீதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இது நாட்டின் அபிவிருத்தியின் போது சுகாதாரம் மிக்க பிரஜைகளை உருவாக்குவதில் எதிர்கால பரம்பரைக்கு சவாலாக அமையும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
குடும்ப சுகாதார வாரியமும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தன.
தேசிய ரீதியாக 18 வயதுக்கும் குறைவான பெண் பிள்ளைகளின் கர்ப்பம் தரித்தல் 6.5 வீதம் என கூறப்பட்டுள்ளது.
ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11.2 வீதம் என அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 18 வயதுக்கும் குறைவான பெண்களின் கர்ப்பம் தரித்தல் வீதம் அதிகரிப்புக்கு பல காரணங்கள் இருந்தாலும் இளவயது திருமணமே பிரதான காரணம் என்று மாவட்ட தாய் சேய் நல மருத்துவ அதிகாரி டாக்டர் இ. சிறிநாத் கூறினார்.
கல்வியிலும் பொருளாதாரத்திலும் காணப்படும் பின்னடைவே இதற்கு காரணமாக அமைகின்றது என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
மாவட்டத்தின் தற்போதைய எண்ணிக்கையை போர்க் காலத்துடன் ஓப்பிடும் போது தற்போதுள்ள வீதம் குறைவாகவே கருத முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments